ஜப்பான் | 80 % மட்டுமே வயிற்றை நிரப்பும் உணவுப் பழக்கம்., 100 வயதை கடப்பவர்களில் அதிகம் பெண்கள்!
ஜப்பானில் நூறு வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை 2025 செப்டம்பர் நிலவரப்படி 99,763 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 55 ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த எண்ணிக்கையில், 88 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானியர்களின் இந்த நீண்ட ஆயுளுக்குப் பின்னால் அவர்களின் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையும், சமூகக் கட்டமைப்பும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
வயறு 80 விழுக்காடு நிறைந்தவுடன் உண்பதை நிறுத்தும் பழக்கம் மற்றும் ஊட்டச்சத்துமிக்க பாரம்பரிய உணவுகள் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. திட்டமிடப்பட்ட உடற்பயிற்சிகளாக மட்டும் இல்லாமல், அன்றாட வீட்டு வேலைகள், நடைப்பயிற்சி மற்றும் முதுமையிலும் தங்களுக்குப் பிடித்தமான பணிகளில் ஈடுபடுவதன் மூலம் தொடர்ச்சியான உடல் இயக்கத்தை பேணுகின்றனர். இது ஜப்பானியர்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.
ஜப்பானில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் நீண்ட காலம் வாழ்வதற்கு அவர்களின் உயிரியல் ரீதியான ஹார்மோன் பாதுகாப்பும், நோய் வராமல் தடுப்பதற்கான மருத்துவப் பரிசோதனைகளை முன்கூட்டியே செய்துகொள்ளும் விழிப்புணர்வும் காரணங்களாகக் கூறப்படுகின்றன. சமூக ரீதியாகப் பார்த்தால், ஜப்பானியப் பெண்கள் முதுமையிலும் தங்களுக்குள் வலுவான சமூகத் தொடர்புகளைப் பேணுகின்றனர். ' நண்பர்களுடன் தினசரி உரையாடுவது அவர்களைத் தனிமையிலிருந்தும், மன அழுத்தத்திலிருந்தும் காக்கிறது.
அரசு வழங்கும் தரமான பொது மருத்துவக் காப்பீட்டின் உதவியுடன் நோய்த் தடுப்புச் சுகாதார நடவடிக்கைகள் மூலம் நோய்கள் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியப்பட்டுச் சரிசெய்யப்படுகின்றன. இந்தத் தடையற்ற மருத்துவச் சேவை மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் ஜப்பானை உலகிலேயே நீண்ட ஆயிள்கொண்ட மக்கள் அதிகம் வாழும் நாடாக ஆக்கியுள்ளன.

