“உப்பு நுகர்வை குறைப்பதால் பக்கவாத ஆபத்தை 25% வரை குறைக்கலாம்”.. மருத்துவர்களின் பரிந்துரை என்ன?
அதிகப்படியான உப்பு நுகர்வு இந்தியர்கள் பலருக்கு ஆயுட்கால நோய்களை அளித்துவருகிறது. உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய்கள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளுக்கு அளவுகடந்த உப்பு நுகர்வே முக்கியக் காரணியாக உள்ளது. அதிகப்படியான உப்பு, ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு தமனிகளை கடினமாக்கி பக்கவாதத்துக்கு வழிவகுப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வயிற்றுப் புற்றுநோய், உடல் பருமன், சிறுநீரகத்தில் கற்கள் ஆகிய பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. ஒரு நபர் ஒரு நாளைக்கு ஐந்து கிராம் அல்லது ஒரு டேபிள்ஸ்பூன் அளவிலான உப்பை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
இதுவே, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்றால் 3.5 கிராம் உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்தியர்கள் தினமும் சராசரியாக 8 முதல் 11 கிராம் வரை உப்பு எடுத்துக்கொள்கிறார்கள். உப்பு நுகர்வைக் குறைப்பதன் மூலம் பக்கவாதம் உள்ளிட்ட ஆபத்துகளை 25 விழுக்காடுவரை குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதற்கான வழிமுறைகளையும் பரிந்துரைக்கிறார்கள்.
உப்பு நுகர்வை படிப்படியாகக் குறைப்பதே பாதுகாப்பானது. உப்பை குறைத்துக்கொண்டு மசாலா பொருட்கள், மூலிகைகள், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, மிளகு போன்றவற்றை அதிகரிப்பதன் மூலம் உணவின் ருசியை அதிகரிக்கலாம். இதன் மூலம் உணவின் ருசி பாதிக்கப்படாது. எலுமிச்சை சாறு, புளி, தயிர் போன்றவையும் குறைவான உப்புடன் தயாரிக்கப்பட்ட உணவுகளின் ருசியைக் கூட்டும். ஊறுகாய், பப்படம், சாஸ், சட்னி போன்ற உப்பு நிறைந்த துணை உணவுகளை தவிர்ப்பதும் ஒட்டுமொத்த உப்பு நுகர்வைக் குறைக்க உதவும்.

