எழுத்தாளர் இரா.முருகனுக்கு `விஷ்ணுபுரம் இலக்கிய விருது'
விஷ்ணுபுரம் இலக்கிய விருது
கோவையில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள விழாவில் எழுத்தாளர் இரா.முருகனுக்கு 2024-ம் ஆண்டுக்கான `விஷ்ணுபுரம் இலக்கிய விருது' வழங்கப்படுகிறது.
கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு சார்பில், தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 'விஷ்ணுபுரம் இலக்கிய விருது' வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் கலைநயமிக்க விருதுச் சிற்பம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும், விருது பெறுபவர் குறித்த ஆவணப் படம் விழா நாளன்று வெளியிடப்படும்.
ஏற்கெனவே இந்த விருது எழுத்தாளர்கள் ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ.முத்துசாமி, ராஜ் கௌதமன், அபி, சுரேஷ்குமார இந்திரஜித், விக்ரமாதித்யன், சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரா. முருகன்
சிவகங்கையில் பிறந்த இரா.முருகன் புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பு முடித்து, வங்கி அதிகாரியாகப் பணியாற்றினார். வங்கி கணினித் துறையில் மென்பொருள் வடிவமைக்கும் தொழில்நுட்ப வங்கியாளராகப் பணியாற்றிய பின்னர், பன்னாட்டு தகவல் தொழில்நுட்பப் பணிக்கு மாறினார். இந்தியா, பிரிட்டன், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கு மகள் ஐஸ்வர்யா, மகன் அஸ்வின் முருகன் உள்ளனர். அஸ்வின் முருகன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது முதல் கவிதை 1978-ல் கணையாழியில் வெளியானது. 2022-ம் ஆண்டு வரை இவரது நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 39 புத்தகங்கள் வெளியாகியுள்ளன. இவைதவிர, தனி மின் நூல்களாக 15 புத்தகங்கள் வெளியாகியுள்ளன. இவரது `அரசூர் வம்சம்' நாவலின் ஆங்கிலப் பதிப்பான `தி கோஸ்ட்ஸ் ஆஃப் அரசூர்' இந்திய புக்கர் விருது என்று சிறப்பிக்கப்படும் க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றது.
இவரது தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த புனைவுகள், அந்தத் துறை சார்ந்த தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிப் படைப்புகளாக விளங்குகின்றன. மேலும், தகவல்தொழில்நுட்பம், வங்கியியல் சார்ந்த நூல்கள் மற்றும் பயணக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். உன்னைப் போல் ஒருவன், பில்லா-2 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ‘ரெட்டைத் தெரு’ என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு இலக்கியச் சிந்தனை விருது, கதா விருது, பாரதியார் பல்கலை. விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி நிரல் என்ன?
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்க அரங்கில் வரும் 22-ம் தேதி மாலை நடைபெறும் விழாவில் இரா.முருகனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. மேலும், இரா.முருகன் குறித்த "A Garden of Shadows" என்ற ஆவணப் படம் திரையிடப்படுகிறது. அவரது படைப்புலகம் குறித்த உரையாடல் நூலான "முப்பட்டைக் கண்ணாடியின் உலகம்" வெளியிடப்பட உள்ளது.
சிறப்பு விருந்தினராக கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பேக் பங்கேற்கிறார். எழுத்தாளர்கள் ஜெயமோகன், ரம்யா மற்றும் எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
விழாவின் முதல் நாள் (டிச. 21) காலை இலக்கிய விவாதங்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. படைப்பாளிகள் கீரனூர் ஜாகிர்ராஜா, லாவண்யா சுந்தரராஜன், மயிலன் ஜி. சின்னப்பன், தமிழ்ப்பிரபா, தென்றல் சிவக்குமார், சித்ரன், வாசகசாலை கார்த்திகேயன், கயல், மந்திரமூர்த்தி அழகு உள்ளிட்ட எழுத்தாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளார்கள், மொழிபெயர்ப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். அவர்களிடம் வாசகர்கள் உரையாடலாம். விழா அரங்கில் சிறு புத்தகக் கண்காட்சியும் அமைக்கப்படும்.
இந்தியாவின் முதன்மையான இலக்கிய நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்கது விஷ்ணுபுரம் இலக்கிய விருது. ஏனெனில், தீவிரமான இலக்கிய ஆர்வமிக்க வாசகர்களாலேயே இவ்விழா ஒருங்கிணைக்கப்படுகிறது. நவீனத் தமிழ் இலக்கியத்துக்குச் செழுமை சேர்த்த முன்னோடிப் படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விஷ்ணுபுரம் இலக்கிய விருது, நடப்பாண்டில் எழுத்தாளர் இரா.முருகனுக்கு வழங்குவது பெருமைக்குரியது என்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.