சக்கர வியூகம் 19 | எழுதிச்செல்லும் விதியின் கைகள்

பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் 19-ம் அத்தியாயத்தை இங்கே பார்க்கலாம்.
சக்கர வியூகம் 19
சக்கர வியூகம் 19 puthiya thalaimurai

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்.

சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்
சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்

அத்தியாயம் 19 - எழுதிச்செல்லும் விதியின் கைகள்

தூக்கத்திலிருந்து விழித்தபோது சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. அவ்வளவு இருளை இந்த வீடு கண்டதேயில்லை. ஒருவேளை கனவோ என்று கிள்ளிப்பார்த்தேன். தொலைபேசியின் வைப்ரேஷன் அடித்து ஓய்ந்துதான் என்னை எழுப்பி விட்டிருக்கிறது என்பதை உணர்ந்து எடுத்தேன். 18 மிஸ்ட் கால்கள் இருந்தன.

பெரும்பாலானவை என் பெர்சனல் செகரட்ரி நைமாவிடமிருந்து. இன்னும் சில தெரியாத எண்கள். முதலில் அவளை அழைத்தேன். முதல் ரிங்கிலேயே எடுத்தாள்.

“மேம் எங்கருக்கீங்க, எமர்ஜென்சி” என்றாள், என் அத்தனை செல்களும் பற்றிக்கொண்டன

“என்னாச்சு நைமா”

அவள் அழுகிறாளா, பதறுகிறாளா?

“மேம்...மேம்…ஏகப்பட்ட குழப்பங்கள். தலைக்கு மேலே காரியங்கள் சென்றுவிட்டன ஷேக் காலித், ஷேக் ரஷீத் ரெண்டு பேரும் கொலை செய்யப்பட்டிருக்காங்க, நம்மை ஷேக்கை காணோம்.”

“காணோமா? வாட் டூ யூ மீன். ”

“ஆமாம், மேடம் அவரைக்காணோம். அவர் செக்யூரிடிகளுக்குகூட விபரங்கள் தெரியலை. மொத்த ராணுவமும் அவர் அரண்மனையை பிடிச்சிருக்கு. எங்கேயும் அவர் இல்லை. மிகுந்த குழப்பமான சூழல். கர்னல் உங்ககிட்ட பேசணும்னு சொன்னாரு”

“வில் கால் யூ பேக்” என்று கட் செய்தேன்.

பரபரவென்று கிடைத்த வெளிச்சத்தைக்கொண்டு,. வாசலில் ஸ்வாமியை டிராப் செய்யச்சொன்ன கார் வந்திருக்கிறதா என பார்த்தேன். முறையாக பார்க் செய்யப்பட்டிருந்தது. மாடிக்கு ஓடினேன் மிக சத்தமாக “ஸ்வாமி, ஸ்வாமி என்று கத்தினேன்” எந்த மறுமொழியும் வரவில்லை. கிடைத்த வெளிச்சத்தில் மொத்த மாடியையும் துழாவினேன். அவரைக்காணவில்லை.

என்றால், என்றால்… நான் இப்போது சக்கரவியூகத்தில் மாட்டப்பட்டிருக்கிறேனா. நடந்தது எல்லாமே நாடகமா. ஸ்வாமிதான் ஒருவேளை ஷேக்குகளை எல்லாம்…...

சே என்ன மடத்தனம் இது, எறும்புக்கூட துரோகம் செய்யாதவரா இதையெல்லாம் செய்வார். ஆனால் ஷேக் எங்கே? என்ன நடக்கிறது. எப்படியாயினும் நான் இப்போது பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட்டேன் என்பது மட்டும் உண்மை.

என் சொத்துக்கள் அனைத்தையும் சமீபத்தில்தான் மாற்றியிருக்கிறேன், நான்தான் கடைசியாக ஷேக்கிடம் பேசினேன், அவரின் உத்தரவுப்படி நாட்டின் பெரும் பணத்தை கிளவுடில் வைத்தேன். ஏகப்பட்ட குற்றங்களை இமைக்கும் நொடிக்குள் செய்து முடித்திருக்கிறேன். இந்த நாட்டின் கடுமையான சட்ட திட்டங்கள் படி வரும் வெள்ளிக்கிழமையே கூட என் தலை கொய்யப்படலாம்

தலை சுற்றியது. இந்தக்கலவரமும், குடித்த ஒயினும் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்திருந்தன. பிடித்துக்கொள்ள ஒரு பிடி வேண்டி வேகமாக அருகிலிருந்த கட்டிலில் அமர்ந்தேன். உட்கார்ந்தவுடன் ஏதோ குத்துவது போல இருந்தது.

சட்டென எழுந்து பார்த்தேன். அது ஸ்வாமி எனக்கு முதல் சந்திப்பின்போது கொடுத்திருந்த எலுமிச்சம்பழத்தை வைத்திருந்த ஃப்ரீசர். ஆ, இதற்கு அதுதான் பொருளா? இத்துடன் எல்லாம் முடிகிறதா? இந்தத்தருணத்தை நோக்கிதான் வாழ்வு என்னை இத்தனை வேகத்துடன் நகர்த்தியதா?

ஸ்வாமி எனக்குக் கணித்துக்கொடுத்த இறுதி நாள் இதுதானா. எத்தனை நீண்ட பயணம் எனது. இப்படி ஒரு இருண்ட இரவில் இவ்வளவு வசதிகள் புரளும், இந்த வீட்டில்தான் என் இறுதிக்கணம் நிகழுமா? மீண்டும் அவரை சந்திக்கவேண்டாமா? நடந்தவைகளுக்கு என்ன பொருள் என்று கேட்கவேண்டுமே!

என்னென்னவோ யோசித்து அதனை அழுத்தினேன்.

முதல் அழுத்தலிலேயே திறந்துகொண்டது. அதற்குள் எலுமிச்சம்பழத்தோடு. ஒரு சிறிய காகிதமும், ஒரு பெரிய சாவிகள் இணைத்த சங்கிலியும் இருந்தது. காகிதத்தில் ஏதோ லொகேஷன் கோ ஆர்டினேட்ஸ் இருந்தன.

ஃபோன் வெளிச்சத்தை இன்னும் அதிகப்படுத்தி, அந்த சாவியை உற்று நோக்கினேன். அது என்னுடைய வீட்டின் பின்புறம் நீர்வழியில் நிறுத்தப்பட்டிருக்கும் என் சொந்த உபயோகத்திற்கான இயந்திரப்படகை இயக்கும் மாஸ்டர் சாவி. அதனருகிலேயே நான் பேக் செய்த பேகும் வைக்கப்பட்டிருந்ததை அப்போதுதான் பார்த்தேன்.

“நான் எப்போதும் உனக்கு பூட்டுகளை மட்டும் கொடுப்பதில்லை, சாவிகளையும் சேர்த்தே வழங்குவேன்” என்று ஆர் ஜே எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. கைப்பையைத்திறந்து நான் எடுத்து வைத்திருந்த மாற்றுடையை எடுத்து அணிந்துகொண்டேன். அந்த கைப்பைக்குள் ஃப்ரீசர் பாக்ஸை வைத்து அந்த பையை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறமாக இருக்கும் கதவினை நோக்கி வேகமாக நடந்தேன்.

வாசற்பக்கம் வழியாக தூரத்தில் சைரன் சத்தம் கேட்டது. ஒருவேளை ராணுவம்தான் நெருங்கிவருகிறதா என்ன? கதவைத்திறந்த நீர்வழியை அடைந்து போட்டை இயக்கினேன்.

அந்த கோ ஆர்டினேட்ஸ், நாட்டின் இன்னொரு எல்லையில் இருந்த இயற்கை துறைமுகம் ஒன்றை காட்டியது. மிக அதிகமான வேகத்தில் படகை இயக்கினேன். 20 நிமிடங்களில் கிட்டத்தட்ட எல்லையை எட்டினேன். தூரத்தில் பச்சை விளக்குகள் மினுங்க இன்னொரு பெரிய ஃபெரி எனக்கு சமிஞ்ஞை கொடுத்துக் கொண்டிருந்தன.

சக்கர வியூகம் 19
சக்கர வியூகம் 17 | ஆபத்துகளின் வாயிலில்

நெருங்கியதும், ஃபஹீமாவின் சிரித்த முகம் தெரிந்தது.

இந்த நேரத்தில் இவள் எங்கே இங்கே இருக்கிறாள். அதுவும் கெக்கே பிக்கே சிரிப்புடன் என்று சற்று கோபம் வந்தது.

“மிருணாள், ஊபர் ஆவோ, ஊபார் ஆவோ” என்றாள் உடைந்த ஹிந்தியில்..

போட்டின் படிகளில் ஓட்டமாய் ஓடிப்போய் ஃபஹீமாவின் தோள்களைப்பிடித்து உலுக்கினேன், “வாட் ஹேப்பண்ட் டூ ஷேக்? வேர் ஈஸ் ஹி” என்றேன்

“நஹி மாலும்” என்றாள் உதட்டைச்சுழித்து

எப்போதும் அவள் முகத்தில் இருக்கும் அந்த அலட்சியமும், உன்னைத்தாண்டி எனக்கு விஷயங்கள் தெரியும் என்ற தோரணையும் சட்டென எரிச்சல் படுத்தின. பொங்கி வந்த கோபம் மொத்தத்தையும் அவள் மீது காட்டினேன்

”ஃபஹீமா. இங்க என்ன நடக்குதுன்னு எனக்குத்தெரியணும். ஏன் இங்க வரச்சொல்லி எனக்கு சமிஞ்ஞை வந்திருக்கு? நீ சக்கூன் பிரதர்ஸ் ஆளா? எதுனால எனக்கு எதுவும் தெரியாம டார்க்ல வச்சிருக்கீங்க. வாட் த ஹெல் ஈஸ் ஹேப்பனிங்”

என்றேன் உச்சக்கோபத்தில்.

சக்கர வியூகம் 19
சக்கர வியூகம் 18 | அலறும் பருந்து

அந்தப்பெரிய போட்டில் எல்லோரும் மிகக் காத்திரமான அரபு மொழி பேசுபவர்களாகவும், புன்னகையை இம்மியளவுக்குகூட சிந்தாமல் உறுத்துப்பார்ப்பவர்களாகவும் இருந்தார்கள். எல்லோரும் என்னை ஒருகணம் நிமிர்ந்து பார்த்தார்கள்

ஃபஹீமா “கூல் டவுன் மிருணா, கூல்டவுன்” என்றவாரே என்னை ஒரு சாய் இருக்கையில் படுக்கவைத்தால்..

ஒருவேளை எனக்காக நிகழ்த்தப்பட்ட நாடகத்தில் இவளும் ஒரு எதிர்பாத்திரமா, நான் மீண்டும் மீண்டும் என் சக்ர வியூகத்திலேயேதான் சுற்றுக்கொண்டிருக்கிறேனா? அயர்ந்து உட்கார்ந்தேன். இனி என்னவானாலும் ஆகட்டும், எதையும் விளக்குமாறு யாரையும் கேட்கப்போவதில்லை என்றோ ஒரு நாள் முடிந்திருக்ககூடிய இந்த வாழ்வு இனி எப்படி முடிந்தால்தான் என்ன என்ற எண்ணம் இருந்தது. ஆனால் ஆர்ஜேவைத்தான் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

இதற்காகத்தானா என்னிடம் அப்படிப்பேசினார் என்ற ஆதங்கம் மட்டும் இன்னும் மேலெழுந்து வந்தது. இப்படி ஒரு முடிவுக்காகத்தானா இத்தனை நாடகமும் என்று அலுப்பாயிருந்தது.மனிதர்களின் கோரவலையில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொள்ளும் சிறுமீன் போன்றதுதான் என் வாழ்வு என்ற எண்ணம் மேலெழுந்து வந்தது.

சக்கர வியூகம் 19
சக்கர வியூகம் 16 | கனவுப்பொழுது

ஏதேதோ துர் நினைவுகள் வந்து சுற்றிக்கொண்டேயிருந்தன. எங்கெங்கோ ஆரம்பித்து சுற்றிச்சுற்றி எத்தனை உயரத்திற்கு போனாலும், என்னைத்தாண்டி ஏதோ ஒன்று என்னை அடித்துக்கொண்டேயிருக்கிறதே என்ற துயரம் வந்து சூழ்ந்துகொண்டது

வறுமை, ஏமாற்றம், துரோகம் எல்லாவற்றையும் கடந்து வந்து மீண்டும் ஒரு பெருஞ்சுழலில் தூக்கியெறியப்பட்டிருக்கிறேனே என்ற ஆற்றாமை சூழ கண்ணீர் விட்டேன்.

தலையைத்தூக்கவே முடியாத அளவிற்கு தலை வலித்தது. அப்படியே சோர்ந்துபோய் படுத்துக்கொண்டேன். ஒயினின் தாக்குதல் இன்னும் எனக்குள் இருந்ததை உணர முடிந்தது. படுத்த இரண்டாம் நிமிடத்தில் கண்கள் மூடிக்கொண்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com