சக்கர வியூகம் 13 | பிங்க்ஸ்டார் பினாமி மற்றும் சக்கூன் சகோதரர்கள்

பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் 13-ம் அத்தியாயத்தை இங்கே பார்க்கலாம்.
சக்கர வியூகம் 13
சக்கர வியூகம் 13புதிய தலைமுறை

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்.

அத்தியாயம் 13 - பிங்க்ஸ்டார் பினாமி மற்றும் சக்கூன் சகோதரர்கள்

ஆபரேஷன் பிங்க்ஸ்டார் பாலஸ்தீனிய பெண்கள் குழந்தைகளுக்கு ஆதரவாக கல்வி, மருத்துவ உதவிகள் செய்யும் ஒரு ரகசியத்திட்டம். ஷேக்கின் விஷன். ஆனால் நாட்டின் பணத்திலிருந்து இதை எடுக்கமுடியாது. பெரியண்ண நாட்டின் மேல் பயம். அரசரும், ஷேக்கின் சகோதரர்கள் உட்பட ராஜாங்க அதிகாரத்தில் உள்ள மற்ற எவருமே இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஷேக் செய்வார். மனிதாபிமான அடிப்படையில். ஆனால் வெளியில் தெரிந்தால் பிரச்சனை, இவரின் வருங்கால அரசியலுக்கே வேட்டாகிவிடும்.

பொதுப்பணம்தான் வழி. ஆனால் திரட்டுவது சுலபமல்ல. ரகசியமாகத்தான் வாங்குகிறோம், மதத்தின் பெயரைச்சொல்லி பெரிய பினாமிகளின் வழி. இப்போது ஸ்வாமி சொல்லும் இந்த 400 மில்லியன் என்பது சாதாரண பணமல்ல. ஆனால் வரும் வழி முக்கியம். ஒரு ஹிந்து சாமியார் பணம் கொடுக்கிறார் என்றால், முதலில் வருமானத்தை விட சந்தேகம்தான் அதிகம் வரும்.

இதில் இதைத்தாண்டிய மிக முக்கிய பயம் சக்கூன் சகோதரர்களைப்பற்றித்தான். ஷேக் காலித் சக்கூன், ஷேக் ரஷீத் சக்கூன் ஆகிய இருவரும் மன்னரின் நான்காவது மனைவியின் மகன்கள். இப்போது அதிகாரபூர்வ இளவரசராக அமானுல்லா ஷேக் இருந்தாலும், இவர்களுக்கும் அதில் பாத்யதை உள்ளதால் எப்போதும் எலியும் பூனையுமென ஷேக் அமானுல்லாவை அவர் செயல்களை விமர்சிக்கும் இயல்புள்ளவர்கள்.

ஷேக் அமானுல்லாவிற்கு கிடைத்த அமெரிக்கக் கல்வியும், உலக அனுபவங்களும், அவரை பக்குவப்படுத்தி, இந்தப்பதவிக்கேற்ற மேன்மையுடன் அவரை தகவமைத்திருக்கின்றன. ஆனால் கல்வியிலும், குணத்திலும் சற்றே பின் தங்கியிருக்கும் சக்கூன் சகோதரர்களுக்கும் இவருக்கும் எப்போதும் ஏழாம் பொறுத்தம்தான்.

அதானாலேயே உள் நாட்டில் ஒரு கலகம் உருவாக்க சக்கூன் சகோதரர்கள் முயன்றுகொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்திருக்கின்றன. வெளி நாட்டு அச்சுறுத்தல்கள் உண்டோ இல்லையோ, சக்கூன் சகோதரர்கள் உருவாக்கும் ஆபத்தை முன்னிட்டுத்தான் ஷேக்கிற்கு அவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிகளும் என்பதையும் அறிந்திருந்தேன்.

விதியே என்று மூத்த சக்கூனை அமைச்சரவையில் பிரதி நிதித்துவம் கொடுத்து வைத்திருக்கிறாரே தவிர, அவர்கள் மீதான கண்ணை எப்போதும் ஷேக் எடுப்பதில்லை. அவர்களுக்கென தனியா புலனாய்வுப்படை, அவர்கள் செல்லும் இடத்திலெல்லாம் கண்காணிக்க சிறப்பு அதிரடிப்படை என அவர்கள் கலகம் செய்யும் எண்ணம் பலித்திரா வண்ணம் சுற்றிலும் அரண்களை வைத்திருக்கிறார்.

ஷேக்குகளின் தந்தை மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதால், ராஜாங்க ரகசியம் என அவர் உடல் நிலை பற்றிய விஷயத்தை வெளியில் விடாமல் வைத்திருக்க்கிறார்கள். அவர் ஐரோப்பிய மருத்துவமனை ஓன்றில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. என்றேனும் ஒரு நாள் அவர் இறந்ததாக அறிவித்துவிட்டால், உடனேயே கலவர மேகம் சூழும் என எதிர்பார்த்திருந்தார்கள்.

இப்போது இது போன்ற சென்சிடிவ் விஷயங்கள் வெளியில் கசிவதெல்லாம் அரசாங்கத்திற்கு நல்லதல்ல. ஷேக்கின் நல்ல மனத்திற்கு விளையும் கேடுகளாகலாம். சக்கூன் சகோதரர்களுக்கு ஊக்கமளிக்கும் செய்திகளாகவும் அமையலாம்.

சக்கர வியூகம் 13
சக்கர வியூகம் 12 | இல்லம் நுழைந்த இறை

ஏகப்பட்ட தடைகளும், யோசனைகளும் இருந்தாலும், எதையுமே முயலாமல் விடுவது என் வழக்கத்திலேயே இல்லை.

உடனேயே ஷேக்கின் முதன்மை செகரட்ரி ஃபஹீமாவை அழைத்தேன்.

“மிருணாள், க்யா சல் ரஹாஹே?” என்றாள்.

இந்தியர்கள் எல்லாரும் ஹிந்தி பேசுவார்கள் என்ற வளைகுடா மனநிலை.

“டீக் ஹூம் ஃபஹீமா, ஆப் கேசே ஹே” என்றேன் சாவதானமாக. அதற்கு மேல் அவளுக்கு ஹிந்தி தெரியாதென்பதால் உடனே பதறி ஆங்கிலத்துக்கு மாறினாள்.

”சொல் மிருணாள்”

“ஷேக் ஊரில் இருக்கிறாரா?”

“ஆமாம், யூ வாண்ட் அப்பாயிண்ட்மெண்ட், எப்போது?”

“முடிஞ்சா இப்பவே”

”வெயிட்”

என்றாள்.

சக்கர வியூகம் 13
சக்கர வியூகம் 11 | முடிச்சு

என் நேரம் நன்றாக இருந்தால், ஷேக் இரவில் அழைக்கச்சொல்வார், இல்லையெனில் நாளை அல்லது நாளை மறுநாள் நேரம் கொடுப்பார் என்று எனக்குள் ஒரு இங்க்கி, பிங்க்கி பாங்க்கி போட்டுக்கொண்டிருந்தேன்.

“மிருணாள், உங்கிட்ட பேசணுங்கிறார், இரு கனெக்ட் பண்றேன்” என்றாள்.

இது திருப்பம். ஒரு நாளும் நடவாதது. கடவுளே...

“யெஸ் மிருணாளினி” ஷேக்கின் மெல்லிய குரல், கடினமனதுக்காரர்களையும் இளக வைக்கும் குரல்.

“குட் ஈவினிங் ஷேக், ஐ ஹேவ் அ கான்ஃபிடன்ஷெயல் மெசேஜ்”

“பேசலாம், உனக்கு கனெக்ட் செய்வது ஹாட்லைனில் அல்ல”

”சொல்வதற்கு தயக்கமாக இருக்கிறது. ஆனால் ஒரு விவிஐபி ஆபரேஷன் பிங்க விங்க்ஸிற்கு பெரும்பணம் தருவதாக சொல்கிறார்.”

சக்கர வியூகம் 13
சக்கர வியூகம் 10 | மலர்வு

ஒரு மெல்லிய மெளனத்திற்குப்பிறகு,

“தொழில் ரீதியாக நம்மைத்தெரிந்தவரா?”

“இல்லை என் பெர்சனல் காண்டாக்ட். இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும், சற்றே தயக்கமாக இருக்கிறது”

“கோ அஹெட்”

“அவர் உங்களுக்கு வயிறு சம்பந்தமான உபாதை ஒன்று இருப்பதாகவும், தன்னால் அதை சில நாட்களிலேயே அதை சரிசெய்யமுடியும் என்றும் சொல்கிறார்”

நீண்ட மெளனம், என் அடிவயிற்றைக் கலங்கச்செய்யும் மெளனம்.

“உனக்கு எத்தனை வருடங்களாகத் தெரியும்”

“கிட்டத்தட்ட 13 வருடங்கள்”

”பெயர்”

“ராஜ ஜனார்த்தனன் ஸ்வாமி”

“யூ மீன் யவர் ஸ்ப்ரிச்சுவல் குரு, தட் லாங் பியர்ட் ஸ்வாமி”

என் அறையில் என் இருக்கைக்கு பின்னே பெரும் புன்னகையுடன் தொங்கிக்கொண்டிருக்கும் ஆர்ஜேவின் பிரம்மாண்ட படத்தை அவர் பார்த்திருக்கிறார். அவரைப்பற்றிய ஒரு அறிமுகமும் கொடுத்திருக்கிறேன்.

”யெஸ் ஷேக்”

”ஓ ஓக்கேகே”

அந்த பாணி ஓகேவிற்கு என்ன பொருள் எனக்குத்தெரியும். ‘அப்போ நீ சொல்றதக் கேக்கணும்கிற’ என்பதற்கான சமிஞ்ஞை அது.

இரண்டு நிமிடங்கள் கழித்துப்பேசுகிறேன் என்றார்.

இரண்டு யுகங்களாக் கழிந்தன. அகலாது அணுகாத தீக்காய்ந்த கங்குகளை அள்ளி இன்று நானே மடியில் விட்டுக்கொண்டேனோ என்று கலக்கமாக இருந்தது.

ஐந்து நிமிடங்கள் கழித்துதான் அழைத்தார். “நாளை காலை “பெலாசோ”வில் எக்சிகியூட்டிவ் சூட்டை உன் பெயரில் புக் செய். 11 மணிக்கு அங்கு ஆர்ஜேவை சந்திக்கலாம். அதே சமயம் நான் 10 மணிக்கு அங்கு வரப்போவதாக கிராண்ட் பால் ரூமையும் ரெட்டி கம்பெனி பெயரில் புக் செய்து அங்கு கார்பரேட் மீட்டிங்கிற்கு என்னை அழைத்திருப்பதாக ஒரு அறிவிப்பை அலுவகத்தில் கொடுத்துவிடு” என்றார்.

சக்கர வியூகம் 13
சக்கர வியூகம் 7 | ஷேக் அமானுல்லா

பாதுகாப்புக் காரணங்கள் புரிந்தது. மகிழ்ச்சியில் மனம் துள்ளியது. ஸ்வாமிக்கு தெரியாத மனிதர்கள் இல்லை, அவரால் இயலாத காரியமென்பது உலகிலேயே எதுவும் இல்லை. ஆனால் என்னிடம் உதவி என்று ஒன்றைக்கேட்டிருக்கிறார். ஒருவேளை அதை செய்யமுடியாது போய்விட்டால், அது என்னை உறங்கவே விடாது என்று எண்ணிக்கொண்டேயிருந்தேன். அது உறுதியான மகிழ்வு எனக்கு பேருவுகையைக்கொடுத்தது.

விடுவிடுவென்று ஸ்வாமிக்கு தகவல் சொல்ல ஓடினேன். “ஸ்வாமி ஷேக் ஓகே சொல்லிட்டாரு” என்றேன். “தெரியுமே” என்றார் சிரிப்புடன், வியப்போடு பார்த்ததைப் புரிந்துகொண்டும், "உன்னிடம் பணித்துவிட்டால் நடவாத காரியம் உலகினில் உளதோ மிருணாளினி" என்கிறார்.

என் கன்னங்கள் சிவந்ததை அவர் கவனித்தாரா தெரியவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com