சக்கர வியூகம் 11 | முடிச்சு

பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் 11-ம் அத்தியாயத்தை இங்கே பார்க்கலாம்.
சக்கர வியூகம் 11
சக்கர வியூகம் 11 ட்விட்டர்

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்.

சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்
சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்

அத்தியாயம் 11 - முடிச்சு

இந்த ஷணம் உயிரைக்கொடு என்றால் கொடுத்திருப்பேன். அதை விடக்கடினமான காரியம் அது. ஷேக் தனக்குத் தெரிந்தவர்களையே வீடியோ கான்ஃபரன்சில்தான் சந்திக்கிறார். அவருக்கு உலகெங்கிலும் இருந்து மரண மிரட்டல்கள் உண்டு. மன்னருக்கு அடுத்த அரசராக பெருமளவு வாய்ப்புள்ள இளவரசர் என்பதால் சொந்த குடும்பத்திலிருந்தே - சொந்த சகோதரர்களிடமிருந்தே அவருக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. 8 அடுக்காக பாதுகாக்கப்பட்ட விஷேஷ மாளிகைக்குள் ஒரு மண்புழு கூட நுழைய முடியாது.

நிச்சயம் வாய்ப்பில்லைதான். ஆனால் ஸ்வாமிக்கு அதைச்சொல்லமுடியாது. ஏதாவது செய்யத்தான் வேண்டும்.

“எனக்குத்தெரியும் சற்றே கடினமான விஷயத்தைத்தான் நான் உன்னைக்கேட்டிருக்கிறேன் என்று. ஆனால் பகவான் பணிப்பதெல்லாமே நம் எல்லைக்குட்பட்டுதான், முயன்று பார்க்காமல் அதை மறுதலித்துவிட முடியாது இல்லையா மிருணாளினி”

”இல்லை ஸ்வாமி அப்படியில்லை…..”

“பதட்டப்படாதே வெறுமனே பூட்டுகளை மட்டும் உன்னிடம் கொடுப்பவனில்லை நான். என்னிடம் இரண்டு சாவிகள் உள்ளன. ஒருவேளை இந்த சாவிகள் அந்தப்பூட்டைத்திறக்கலாம், அல்லது திறக்கும் வழியைப்பிறப்பிக்கலாம் முயற்சித்துப்பார்க்கிறாயா?” என்றார்.

புரியாமல் நிமிர்ந்து பார்த்தேன்.

”ஷேக்கிடம் ஆபரேஷன் பிங்க் விங்க்ஸ்க்கு 400 மில்லியன் திர்ஹாம்களை என்னால் திரட்டித்தரமுடியும் என்று சொல், பிறகு அவரின் தீராத வயிற்றுவலிக்கு அவரின் பிரிட்டன் டாக்டரிடம் இல்லாத மருந்து என்னிடம் உள்ளதாகவும் சொல்”

விதிர்விதிர்த்துப் போய்விட்டேன். என் உடலெங்கும் வியர்த்துக்கொட்டி, அட்ரீனலின் பெருமளவு பாய்ந்ததை உணர்ந்தேன். இவர் சொன்ன இரண்டு சங்கதிகளும் அவர் குடும்ப உறுப்பினர்கள் கூட அறியாதது. அதிலும் இந்த ஆபரேஷன் பிங்க் விங்க்ஸ் என்பது உலகிலேயே என்னையும் ஷேக்கையும் சேர்த்து மொத்தம் நால்வருக்கு மட்டுமே தெரிந்த ரகசிய சங்கதி.

இந்த மனிதர் சந்நியாசியா இல்லை வேறு ஏதாவதா என்று முதன்முதலாக யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.

“புகழ் பெற்ற சந்நியாசம் என்ற உள்ள நகைமுரணை நான் எப்போதுமே ரசிப்பதில்லை மிருணாளினி. இது தரும் தொல்லைகள் அளவற்றன. எந்த நாட்டிற்குப்போனாலும் அந்த அரசாங்கம் சார்ந்து எனக்கான அளவீடுகள் சார்ந்து லோகஷேமத்துக்காக நிறைய விஷயங்களை செய்யுமாறு பணிக்கப்படுவதை எங்ஙனம் தவிர்க்க வேண்டும் என்பதை அறியாமலேயே வளர்ந்துவிட்டேன்.

சக்கர வியூகம் 11
சக்கர வியூகம் 10 | மலர்வு

தேவையான இடங்களில் இல்லை என்று சொல்லி பழகுங்கள் என ஒரு மேலாண்மை வகுப்பெல்லாம் இருக்கிறதில்லையா, அதிலாவது சேர்ந்து கற்றிருக்கலாம்”

எனக்கு இருந்த குழப்பத்தில் போன தலைவலி திரும்ப வரும்போல இருந்தது.

“இதுவும் ஒருவிதமான சேவைதான். ஆபரேஷன் பிங்க்விங்க்ஸ் ஃபண்டிங்கை விட, உன் ஷேக்கின் வயிற்றுவலியைத் தீர்ப்பதுதான் என் தலையாய பணி. கேட்டுச்சொல். நான் சற்று உறங்கி எழுகிறேன்” என்று, மெல்ல சீட்டின் பின்புறம் சாய்ந்துகொண்டார். பவர் நாப் என்று படுத்த அடுத்த சில நொடிகளில் உறங்கிவிடுவார், அவர் பழக்கம்.

வண்டியை ஸ்டார்ட் செய்து நகர்த்தினேன். பலத்த யோசனையில் என்னைத் தள்ளிவிட்டார். ஸ்வாமியை வீட்டில் விட்டுவிட்டு பிறகு இதைப்பற்றிய யோசனையைத் தொடர முடிவு செய்துகொண்டேன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com