பீகார் | “வரதட்சணையாக கிட்னியை கேட்கிறார்” - மாமியார் மீது மருமகள் கொடுத்த பகீர் புகார்!
திருமணம் என்பது மனித வாழ்வில் கலாசாரரீதியாக நடைபெறக் கூடிய ஒரு சடங்கு முறையாகும். இதை, ஒருசிலர் காதல் மூலம் செய்து கொள்கின்றனர். இன்னும் பலரோ, இருவீட்டாருடன் சம்மதத்துடன் நிச்சயித்து செய்துகொள்கின்றனர். இப்படி, நிச்சயித்து செய்யும்போது பொருத்தம், வசதி, வரதட்சணை உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், பீகாரில் பைக், பணம், நகைகள் தர முடியாத பெண்ணிடம், அவரது மாமியார் கிட்னியை வரதட்சணையாகக் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு பீகாரில் உள்ள முசாபர்பூரில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக தீப்தி என்ற பெண் அவ்வூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். அதில், ’எனக்கு 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில், எனது திருமணம் சுமுகமாக நடைபெற்றது. பின்னர், எனது மாமியார் நாட்கள் செல்லச்செல்ல என்னை மனரீதியாக துன்புறுத்தத் தொடங்கினார். உடல் ரீதியாகவும் தாக்கத் தொடங்கினார்.
எனது பெற்றோர் வீட்டிலிருந்து ஒரு பைக் மற்றும் பணத்தைக் கொண்டு வரச் சொல்லி மிரட்டினார். என்னாலும், என் வீட்டாராலும் அதைக் கொடுக்க முடியாதபோது, என்னுடைய மாமியார் என் சிறுநீரகங்களில் ஒன்றை நோய்வாய்ப்பட்ட தனது கணவருக்கு தானம் செய்யுமாறு கட்டாயப்படுத்தத் தொடங்கினார். ஆகையால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
இதுகுதொடர்பாக அவர், ”ஆரம்பத்தில், என் மாமியார் என் சிறுநீரகத்தை என் கணவருக்கு தானம் செய்யச் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் பின்னர் அவர்கள் என்மீது அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். நான் என் சிறுநீரகத்தை தானம் செய்ய மறுத்தேன். இதனால் நான் தாக்கப்பட்டு, என் மாமியார் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டேன். பின்னர் என் பெற்றோரின் வீட்டிற்குச் சென்று மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் இருதரப்பினரையும் அழைத்துப் பேசினர். ஆனால், பாதிக்கப்பட்ட தீப்தி கணவரிடமிருந்து விவாகரத்து பெற வேண்டும் என வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து மாமியார் குடும்பத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அடுத்தகட்ட விசாரணையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.