பீகார் | மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பும் சிராக் பஸ்வான்.. பின்னணியில் பாஜக?
மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்ப விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னால் பாஜகவின் காய் நகர்த்தல் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தற்போது மத்திய இணையமைச்சராக உள்ள சிராக் பஸ்வான் பீஹார் அரசியலில் களமிறங்க விருப்பம் தெரிவித்துள்ளார். பீஹார் முதல்வர் பதவிக்கான போட்டியில் சிராக்கும் களமிறங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பை, இந்த தகவல் ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே பீஹாரில் சிராக் தீவிர சுற்றுப்பயணம் செய்து வருவதும் இந்த யூகத்திற்கு வலு சேர்க்கிறது. நிதிஷ்குமார்தான் முதல்வர் வேட்பாளர் என தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துவிட்டாலும், அவரது செல்வாக்கும் உடல் நலனும் குறைந்து வருவதால் அவரே தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நேரத்தில் சிராக்கின் நகர்வுகள் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நிதிஷ்குமாருக்கு பதிலாக சிராக் பஸ்வானை கொண்டு வர பாஜக விரும்புகிறது அல்லது தொகுதி பங்கீட்டில் நிதிஷ் குமாரின் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்கான தந்திரமாக இருக்கலாம் என பீஹார் மாநில அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த பேரவை தேர்தலில் சிராக் பஸ்வான் கட்சி, தொகுதி பங்கீடு அதிருப்தி காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துப்போட்டியிட்டதே அத்தேர்தலில் நிதிஷ் கட்சியை விட பாஜக அதிக இடங்களை வெல்ல முடிந்ததற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதன் பின்னால் பாஜகவின் வியூகம் இருந்ததாகவும் கூறப்பட்டது. சிராக்-ஐ மாநில அரசியலுக்கு கொண்டு வருவது மூலம் அவரை பயன்படுத்தி பீஹாரில் தன் இலக்கை எட்ட பாஜக காய் நகர்த்துகிறதா என்றும் யூகங்கள் எழுந்துள்ளன.