பீகார் | நெற்றியில் குங்குமம் வைத்தபோது நடுங்கிய கை.. திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
திருமணம் என்பது ஓர் அழகான நிகழ்வு. ஆனால், அது நடைபெறுவதற்கு முன்பாகவே ஒருசில காரணங்களால் நின்றுபோவதும் உண்டு. அந்த வகையில், பீகாரில் பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்தபோது மணமகனின் கை நடுங்கியதால் திருமணம் நின்றுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் ஜோடி ஒருவருக்கு பெற்றோர் மூலம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, திருமணத்திற்கு முன்னதாக, குங்குமம் வைக்கும் சடங்கு நடைபெற்றது. இதற்காக இருதரப்பிலும் உறவினர்களும் நண்பர்களும் வருகை புரிந்திருந்தனர். இந்தச் சடங்கின்போது, மணமகன் பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைக்கச் சென்றார். அப்போது அவரின் கை நடுங்கியுள்ளது. இதனைப் பார்த்த மணப்பெண், மணமகனுக்கு உடலில் ஏதோ குறை உள்ளது. இந்த திருமணம் எனக்குச் சொல்லி அப்போதே திருமணத்தை நிறுத்தியுள்ளார். இருதரப்பிலும் மணமகளிடம் எடுத்துச் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. இறுதியில் இவ்விவகாரம் உள்ளூர் காவல் நிலையம் வரை சென்றுள்ளது. ஆனால், அங்கேயும் பலனில்லை. இறுதிவரை மணப்பெண் உறுதியாக இருந்ததால், திருமணம் பாதியிலேயே நின்றுபோனது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.