புனே | பேருந்து படுக்கையிலேயே பிறந்த குழந்தை.. ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த இளம் ஜோடி.. கொடூரம்!
மகாராஷ்டிரா மாநிலம் பர்பானியில் (Maharashtra’s Parbhani) ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் 19 வயது பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.. ஆனால் அவரும் அவரது கணவர் என்று கூறிக்கொள்ளும் ஒருவரும் புதிதாகப் பிறந்த குழந்தையை ஜன்னலுக்கு வெளியே வீசியதால் குழந்தை இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15, 2025) காலை 6.30 மணியளவில் பத்ரி-சேலு சாலையில் நடந்தது. பேருந்தில் இருந்து ஏதோ ஒரு பொருள் துணியால் சுற்றப்பட்டு வெளியே வீசப்பட்டதை ஒருவர் பார்த்துள்ளார். அதனை அடுத்து அது குழந்தை என தெரியவரவே காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது..
இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், "ரித்திகா தேரே என்ற பெண், புனேவிலிருந்து பர்பானிக்கு, தனது கணவர் என்று கூறிக்கொண்ட அல்தாஃப் ஷேக்குடன், சாண்ட் பிரயாக் டிராவல்ஸின் ஸ்லீப்பர் கோச் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். பயணத்தின்போது, கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இருப்பினும், தம்பதியினர் புதிதாகப் பிறந்த குழந்தையை ஒரு துணியால் சுற்றி வாகனத்திலிருந்து வெளியே எறிந்தனர்," என்று அதிகாரி கூறினார்.
மேலும் ”மேல் மற்றும் கீழ் பெர்த்களைக் கொண்ட பெட்டிகளைக் கொண்ட அந்த ஸ்லீப்பர் பேருந்தின் ஓட்டுநர், ஜன்னலிலிருந்து ஏதோ வெளியே வீசப்பட்டதைக் கவனித்தார். அதைப் பற்றி விசாரித்தபோது, ஷேக் தனது மனைவி பேருந்து பயணத்தின் காரணமாக குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்ததாகக் கூறினார்.
ஆனால் இதற்கிடையில், சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர் பேருந்து ஜன்னலுக்கு வெளியே எறியப்பட்ட அந்த பொருளை எடுத்து பார்த்துள்ளார். அப்போது, அது ஒரு ஆண் குழந்தை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக 112 என்ற உதவி எண்ணை அழைத்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்” என அவர் கூறினார்.
பின்னர் இது குறித்த தகவல் தெரிந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் காவல்துறையினர் பேருந்தை வழிமறித்து சோதனை செய்தனர். வாகனத்தை ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அந்தப் பெண்ணையும் ஷேக்கையும் கைது செய்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து அந்த பெற்றோர் கூறுகையில், குழந்தையை வளர்க்க முடியாததால் புதிதாகப் பிறந்த குழந்தையை வீசிச் சென்றோம். மேலும் குழந்தை சாலையில் வீசப்பட்ட காரணத்தினால் இறந்துவிட்டது என்றும் அவர்கள் கூறினார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, தேரே மற்றும் ஷேக் இருவரும் பர்பானியைச் சேர்ந்தவர்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புனேவில் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களை கணவன் மனைவி என்று கூறிக்கொண்டனர், ஆனால் அந்தக் கூற்றை நிரூபிக்கும் வகையில் எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாக அந்த அதிகாரி கூறினார். அதன் பிறகு அவர்களைக் காவலில் எடுத்த போலீசார் அந்தப் பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பர்பானியில் உள்ள பத்ரி காவல் நிலையத்தில் தம்பதியினர் மீது பிஎன்எஸ் பிரிவு 94 (3), (5) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது..