சூறாவளி பிரசாரம் | பாஜகவின் கணிப்புகளை தவிடுபொடியாக்கிய ஜார்க்கண்டின் சிங்கப்பெண் 'கல்பனா சோரன்'!
மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய ஹேமந்த் சோரன் கட்சி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை நவ.23 நடைபெற்றது. இதில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + காங்கிரஸ் கூட்டணியே வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து, ஹேமந்த் சோரனே ஆட்சியமைக்க உள்ளார்.
மறுபுறம், இவரது மனைவி கல்பனா முர்மு சோரன், கண்டே தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவரும் வெற்றிபெற்றுள்ளார். ஆரம்பத்தில் பின்னடைவே சந்தித்தபோதும் இறுதியில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் முனியா தேவியை, 17,142 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கல்பனா சோரன் 1,19,372 வாக்குகள் பெற்றிருந்தார். இந்த தேர்தலிலும் வெற்றிபெற்றதன் மூலம், அவர் ஜார்க்கண்ட்டின் சிங்கப் பெண்ணாக மாறியுள்ளார்.
யார் இந்த கல்பனா முர்மு சோரன்?
பஞ்சாபில் பிறந்த இவரது குடும்பம், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தது. என்றாலும், ராணுவக் குடும்பத்தில் இருந்து வந்த இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற கல்பனா, ஐந்து மொழிகளில் புலமை பெற்றவர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை மணமுடித்த பிறகு அரசியலில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்தார்.
இந்தச் சூழலில்தான், கண்டே தொகுதியில் கடந்த முறை வெற்றிபெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏ சர்பராஸ் அகமது தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவிற்கு, கல்பனா சோரன்தான் காரணம் என அங்குள்ள அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அதற்குக் காரணம், பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் ஹேமந்த் சோரனுக்கு எதிராக விசாரணை நடத்தி வந்தநிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்ற அச்சம் நிலவியது. அதன்படி, ஜனவரி 31ஆம் தேதி ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
”ஜார்கண்ட் தலைகுனியாது” நம்பிக்கையுடன் அரசியலை தொடங்கிய கல்பனா!
இந்தச் சூழலில்தான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் எதிர்காலம் குறித்தும் அடுத்து வரக்கூடிய சட்டசபைத் தேர்தல் குறித்தும் பரவலாகப் பேசப்பட்டது. இந்த இடைவெளியைப் போக்கும் நோக்கில் அரசியல் களத்தில் குதித்தார் கல்பனா. மார்ச் 4, 2024 அன்று கிரிதியில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிறுவன தினத்தன்று கால் பதித்தார். எனினும், ஜார்க்கண்ட்டில் அவருக்கு பொறுப்பு அதிகமாகவே இருந்தது. முதல்முறையாக தலைநகர் டெல்லி ராம்லீலா மைதானத்தில் i-n-d-i-a கூட்டணியில் பங்கேற்ற அவர், ”ஜார்கண்ட் தலைகுனியாது” என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தார்.
இதற்கிடையே, கண்டே தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டார் கல்பனா. அந்த தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட அவர், பழங்குடியினரின் உரிமைகளையும் ஆளும் அரசு செய்ததையும் எடுத்துரைத்தார். அங்கு மட்டுமல்ல, அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் மாநிலம் முழுவதும் நட்சத்திரப் பேச்சாளரானார். ஹேமந்த் இல்லாத குறையைப் போக்கி மக்கள் மத்தியில் தன் முகத்தைப் பதித்தார். ஜேஎம்எம் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள், குறிப்பாக முக்யமந்திரி மைய சம்மான் யோஜனா, மற்றும் ஆதிவாசி அஸ்மிதா (பழங்குடியினரின் பெருமை) பற்றிய தனது பிரசாரத்தை முன்னெடுத்தார். மையா சம்மான் யோஜனா தகுதியுள்ள பெண் பயனாளிகளுக்கு மாதம் ரூ 1,000 பெற உதவுகிறது.
5 மொழிகளில் உரையாடி மக்களுடன் கலந்த கல்பனா
பழங்குடியின அடையாளம், மாநில உரிமைகள், ஹேமந்த் கைது, இடஒதுக்கீடு மற்றும் சர்னா மதக் குறியீடு ஆகியவற்றை முன்னிறுத்தி கல்பனா தனது பிரசாரத்தை மேற்கொண்டார். ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், முக்கியமாக பழங்குடியின பெண்களிடையே நன்கு பரிச்சயமானார். மேலும், அவருக்கு நன்கு தெரிந்திருந்த 5 மொழிகளையும் பயன்படுத்தி அம்மொழி மக்களுடன் ஒன்றிணைந்தார். இந்த வாய்ப்பைப் புரிந்துகொண்ட கல்பனா, மக்களுடன் இணைந்தார். மேலும், தேர்தல் பிரசாரத்தின்போது அவரது மொழி அறிவு நன்றாகப் புலப்பட்டது. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் தைரியமாக பதிலளித்தார்.
அதன் விளைவு, அந்த தொகுதியில் மட்டுமல்ல, அவருடைய கட்சி மக்களவைத் தேர்தலிலும் மகத்தான வெற்றிபெற்றது. இதில் குறிப்பாக, பாஜகவின் பழங்குடி முகமும் மத்திய அமைச்சருமான அர்ஜுன் முண்டாவே தோல்வியடைந்தார்.
இதற்கிடையே, ஹேமந்த் சோரனுக்குப் பிறகு முதல்வர் பதவியை ஏற்ற சம்பாய் சோரன், அவர் ஜாமீனில் வந்த மீண்டும் பிறகு அதிருப்தியடைந்து பாஜகவில் இணைந்தார். இதனால், ஆளும் அரசுக்கு அவ்வளவுதான் என கருத்துகள் கூறப்பட்டன. ஆனால், அதன்பிறகு மேடையில் தன் கணவர் ஹேமந்த் சோரனுடன் இணைந்து சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார் கல்பனா. அதன் பயன்தான் தற்போதும் அவரை சட்டப்பேரவைக் கொண்டுசென்றுள்ளது. இந்த சட்டசபைத் தேர்தலிலும், ஹேமந்த் சோரனைவிட கல்பனாவின் தேவை அதிகமாக இருந்தது. மேலும், அவரை தீவிர பிரசாரத்தால், 81 சட்டமன்றத் தொகுதிகளில் 29 இடங்களில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.