”ரூ.500 கோடி கொடுத்தால் முதல்வர் சீட்” - காங்கிரஸிலிருந்து சித்துவின் மனைவி இடைநீக்கம்!
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி, நவ்ஜோத் சித்துவின் மனைவி கவுரை, இடைநீக்கம் செய்துள்ளது. ஆனால், இந்த திடீர் நடவடிக்கைக்கான எந்த காரணத்தையும் அதிகாரப்பூர்வ கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்து, பின்னாளில் அரசியல்வாதியாக மாறியவர் நவ்ஜோத் சிங் சித்து. இவருடைய மனைவி நவ்ஜோத் கவுர். இருவரும் பஞ்சாப் மாநில காங்கிரஸில் அங்கம் வகிக்கின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நவ்ஜோத் கவுர், “நாங்கள் எப்போதும் பஞ்சாப் மாநில நலன் மற்றும் பஞ்சாபிகளுக்காகவே பேசுவோம். ஆனால், முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கு ரூ.500 கோடி பணம் கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் வசதி இல்லை. ஆனால், பஞ்சாபை பொற்கால மாநிலமாக மாற்றும் வல்லமை எங்களிடம் உள்ளது.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கெனவே ஐந்து தலைவர்கள் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகின்றனர். காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக சித்துவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், அவர் மீண்டும் அரசியலுக்கு வலிமையுடன் திரும்புவார். இல்லையெனில், அரசியலுக்கு வெளியே நல்ல வருமானம் ஈட்டுவதில் அவர் மகிழ்ச்சியாக இருப்பார்” எனத் தெரிவித்திருந்தார். இது பஞ்சாப் மாநில அரசியலில் கடுமையான எதிர்ப்பலைகளைத் தூண்டியதுடன், சலசலப்புகளையும் ஏற்படுத்தியது. இதை இறுகப் பிடித்துக் கொண்ட பாஜக, ”இது காங்கிரசுக்குள் நிறுவனமயமாக்கப்பட்ட ஊழலுக்கு சான்றாகும்” என்று கூறியது.
பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, "தலைவர்கள் முதல் ஊழியர்கள் வரை ஊழல் காங்கிரஸை விழுங்கிவிட்டதைக் காட்டுகிறது” என்று குற்றம்சாட்டினார். இன்னும் ஒருபடி மேலேபோன் பஞ்சாப் பாஜக தலைவர் சுனில் ஜாக்கர், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஒருவர் பதவியைப் பெறுவதற்காக ரூ.350 கோடி கொடுத்ததாகக் கூறப்படும் செய்தியைத் தாம் கேள்விப்பட்டதாக நினைவுப்படுத்தினார். இந்த நிலையில்தான், நவ்ஜோத் கவுரை, பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி, இடைநீக்கம் செய்துள்ளது. ஆனால், இந்த திடீர் நடவடிக்கைக்கான எந்த காரணத்தையும் அதிகாரப்பூர்வ கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சித்து, பல மாதங்களாக கட்சிக்குள் செயலற்ற நிலையில் இருந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் பிரசாரத்தைத் தவிர்த்துவிட்டார். ஆனால், ஐபிஎல் வர்ணனைக்குத் திரும்பிய அவர், சமீபத்தில் ஒரு தனிப்பட்ட யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளார்.

