அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில அமைச்சராக இருந்தார். இவருக்கும் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும் கடும் மோதல் நிலவி வந்தது. இதனால் அவர் வகித்து வந்த இலாகா பறிக்கப்பட்டு, வேறு இலாகா கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக ராகுல் காந்தியை சந்தித்து புகார் அளித்தார் சித்து.
பின்னர் மக்களவைத்தேர்தலில் பிரசாரங்களில் ஈடுபட்டார். அப்போது, ராகுல் காந்தி அமேதியில் தோற்றால், நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன் என்று கூறியிருந்தார். தேர்தல் முடிவுக்கு பின் அரசியலைவிட்டு விலகவில்லையா என பாஜகவினர் பலரும் சித்துவை வறுத்து எடுத்தனர்.
இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் தொடர்ந்து பிரச்னை இருந்து வந்த நிலையில் அமைச்சர் பதவியை சித்து ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா செய்தது குறித்து ஜூன் 10இல் ராகுல்காந்திக்கு அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் சித்து வெளியிட்டுள்ளார்.