தக் லைஃப் பட வழக்கு | நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா? – கமலுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
நடிகர் கமல்ஹாசன் 'தக் லைஃப்' என்ற படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம், நாளை மறுநாள் (5-ந்தேதி) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, 'தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி' என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கர்நாடக அரசியல்வாதிகள், கன்னட அமைப்புகள், கன்னட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன. கன்னட சினிமா வர்த்தக சபையும் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட அனுமதி கிடையாது எனக் கூறியுள்ளது. இதனால் கர்நாடகத்தில் அவரது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை கமல்ஹாசன் தரப்புக்கு எழுப்பியுள்ளது.
நீங்கள் (கமல்ஹாசன்) என்ன வரலாற்று ஆய்வாளரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்னை முடிந்து இருக்கும். கமல்ஹாசனோ அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்களின் உண்ர்வுகளை புண்படுத்தக் கூடாது. கன்னடம் தமிழில் இருந்து வந்ததற்கான ஆதராம் உள்ளதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும் 300 கோடி ரூபாய் செலவில் படம் எடுக்கப்பட்டதாக சொல்றீங்க மன்னிப்பு கேட்பதற்கு என்ன. மன்னிப்பு கேட்க முடியாது என்றால், கர்நாடகாவில் படம் திரையிட வேண்டாம் விட்டுவிடுங்கள். நானே இந்த திரைப்படத்தை பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் இந்த விவகாரத்தினால் அது பார்க்க முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.