மேற்குவங்கம் அரசியல் வரலாறு| 30 ஆண்டுகளில் 3 கட்டமாக மாறிய அரசியல்.. முழு விவரம்!
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், 30 ஆண்டுகளில் அரசியல் சமன்பாடு முழுமையாக மாறியது. புதிதாக உருவான திரிணாமூல் காங்கிரஸ் வேகமாக எழுந்து காங்கிரஸை மூன்றாம் இடத்துக்கு தள்ளியது. பின்பு திரிணமூல் ஆட்சியை உறுதிப்படுத்த, பாஜக எதிர்க்கட்சியாக உயர்ந்தது; பழைய இரு கட்சிகள் ஓரங்கட்டப்பட்டன.
1996இல் மேற்கு வங்க அரசியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் காங்கிரஸுமே ஆதிக்கம் செலுத்தினர். அப்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் 39.5% வாக்குகளை பெற்று வாக்கு சதவீத அளவில் முதலிடத்தில் இருந்தது. அப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடங்கப்படவே இல்லை. ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் நிலை மாறியது. தொடங்கி 3 ஆண்டுகளே ஆகியிருந்த திரிணமூல் அந்தாண்டில் 31% வாக்கு சதவீதத்தை பெற்றது. ஆனால் முந்தைய தேர்தலில் முதலிடத்தில் இருந்த காங்கிரஸ் 8% வாக்குடன் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
2001இல் திரிணமூல் 31% வாக்குகள் பெற்ற நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி 37% வாக்குகளுடன் தனிப்பெருங்கட்சியாக வந்து கூட்டணி ஆட்சி அமைத்திருந்தது. 2016 தேர்தலில் திரிணமூல் 45% வாக்குகளை பெற்று 2ஆவது முறையாக ஆட்சியமைத்த நிலையில் மார்க்சிஸ்டின் வாக்கு சதவீதம் 20 ஆக சரிந்தது.
2016 தேர்தலில் பாஜகவின் எழுச்சி தொடங்கியது. அப்போது அக்கட்சி 10% வாக்குகள் பெற்ற நிலையில் மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கூட்டணி 32% வாக்குகளை பெற்றிருந்தது. 2021இல் பாஜக 38% வாக்குகளுடன் எதிர்க்கட்சியாக உயர்ந்த நிலையில் மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து 8% வாக்குகளையே பெற்றிருந்தன.
1996இல் முதல் 2 இடங்களில் இருந்த காங்கிரசும் மார்க்சிஸ்டும் தற்போது 3, 4ஆம் இடங்களுக்கு தள்ளப்பட்ட நிலையில் அப்போது மாநில தேர்தல் களத்தில் இல்லவே இல்லாத திரிணமூல் காங்கிரஸும் பெரிதாக பேசப்படாத பாஜகவும் முதல் 2 இடங்களுக்கு முன்னேறியுள்ளன.

