மேற்கு வங்கம்: பரப்புரையில் மாணவிக்கு முத்தம் கொடுத்த பாஜக எம்பி.. வெடித்த சர்ச்சை!

மேற்கு வங்க மாநிலத்தில் பரப்புரையின்போது மாணவி ஒருவருக்கு பாஜக எம்பி முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காகன் முர்மு
காகன் முர்முட்விட்டர்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மும்முனைப் போட்டியில் தகிக்கும் மேற்கு வங்கத்தில், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அத்துடன் மேற்கு வங்கத்தில் இந்த முறை அதிக தொகுதிகளைக் கைப்பற்றவும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் ஒருவர் தேர்தல் பரப்புரையின்போது இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மால்டா வடக்குத் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியின் சிட்டிங் எம்பியாக இருப்பவர், காகன் முர்மு. பாஜக சார்பில் அவருக்கு மீண்டும் இதே தொகுதியில் சீட் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், வாக்கு சேகரிக்கும்போது அவர் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். “ 'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான்” என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

இதையும் படிக்க: அமேதியில் மீண்டும் ராகுல்.. ரேபரேலியில் பிரியங்கா.. உ.பியில் காங்கிரஸ் போடும் மெகா கணக்கு!

காகன் முர்மு
சந்தேஷ்காலி பாஜக வேட்பாளர்: விமர்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்.. புகார் அளித்த ரேகா பத்ரா!

இதுகுறித்து அந்தக் கட்சி தன்னுடைய எக்ஸ் தளத்தில், “நீங்கள் பார்ப்பதை உங்களால் நம்ப முடியவில்லை என்றால், நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். ஆம், இவர்தான் பாஜக எம்பியும் மால்டா வடக்குத் தொகுதி வேட்பாளருமான காகன் முர்மு. இவர், வாக்கு கேட்கும்போது பெண் ஒருவரை முத்தமிட்டுள்ளார். பெண் மல்யுத்த வீரர்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட எம்.பி.க்கள் முதல் வங்காளப் பெண்களைப் பற்றி கேவலமான பாடல்களைப் பாடும் தலைவர்கள் வரை பாஜக முகாமில் பெண்களுக்கு எதிரான அரசியல்வாதிகளுக்கு பஞ்சமில்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்” எனப் பதிவிட்டுள்ளது.

இதுகுறித்து எம்பி காகன் முர்மு, “எல்லோரும் குழந்தைகளை நேசிக்கிறார்கள். அந்தப் பெண் எனக்கு அறிமுகமானவர். அந்தச் சமயத்தில் சிறுமியுடன் அவரது பெற்றோரும் உடன் இருந்தனர். அந்த படத்தை ஃபேஸ்புக்கில் வைரலாக்கி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உண்மையில் பெண் இனத்தை அவமரியாதை செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் தகவல்களின்படி, காகன் முர்முவால் முத்தமிடப்பட்ட அந்தப் பெண் ஒரு நர்சிங் மாணவி என தெரியவந்துள்ளது. அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து மிகவும் வருத்தமும் அவமானமும் அடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர், தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா: ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் முடிவுக்கு வந்த தொகுதிப் பங்கீடு!

காகன் முர்மு
மம்தாவை தரக்குறைவாக விமர்சித்த மத்திய அமைச்சர்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய திரிணாமுல் காங்கிரஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com