6 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள்.. பாகிஸ்தானில் விஐபியாய் வலம் வந்தாரா யூடியூபர் ஜோதி?
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. எனினும், தொடர்ந்து பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமான தகவல்களைச் சேகரித்து வருகிறது. இந்தச் சூழலில், இந்தியாவைச் சேர்ந்த சிலரே, உளவாளிகளாகச் செயல்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உட்பட வட இந்திய மாநிலங்களில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில், ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான்-உர்-ரஹீம் (டேனிஷ்) என்பவருடன் தொடர்பில் இருந்ததாகவும், பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாகவும் உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் ஜோதி மல்கோத்ரா காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது அவரைப் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இவர் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அனார்கலி பஜாரில், ஆறு துப்பாக்கிய ஏந்திய நபர்களுடன் இருந்ததை ஸ்காட்லாந்து யூடியூபர் காலும் மில் என்பவர் தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
அவரது பதிவில், ‘ஜோதி மல்ஹோத்ராவை சுற்றிலும் ஏகே-47 துப்பாக்கிகளுடன் ஆறு பாதுகாவலர்கள் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த இவர், பாகிஸ்தானின் விருந்தாளியாக உபசரிக்கப்படுகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ, ஜோதியின் பாகிஸ்தான் பயணங்களில் அவர் பெற்ற விஐபி வரவேற்பு மற்றும் அவரது சந்தேகத்திற்குரிய தொடர்புகளை வெளிப்படுத்தியது. இதையடுத்து காவல் துறையினரின் கூற்றுப்படி, அவர், இந்தியா திரும்பிய பிறகும் பாகிஸ்தான் உளவு அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அவர் என்ன தகவல்களை கசியவிட்டார் என்பதை போலீசார் விசாரிக்கும் நிலையில், அவரது டிஜிட்டல் சாதனங்கள் இப்போது ஸ்கேன் செய்யப்பட்டு வருகின்றன. தவிர, ஜோதி மல்ஹோத்ராவின் நிதிநிலை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது வருமானத்திற்கு ஏற்றவாறு ஆடம்பரமான வாழ்க்கையைத் தேர்வு செய்து வாழ்ந்துள்ளார் என்று போலீசார் கண்டறிந்துள்ளனர்.
அவர் எப்போதும் விமானங்களில் முதல் வகுப்பில் பயணம் செய்ததாகவும், ஆடம்பரமான ஹோட்டல்களில் மட்டுமே தங்கியதாகவும், உயர் ரக உணவகங்களிலேயே உணவருந்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். பாகிஸ்தானில் இருந்து திரும்பிய சிறிது நேரத்திலேயே, அங்கு அவருக்கு விஐபி சிகிச்சை கிடைத்ததும், ஜோதி மல்ஹோத்ரா சீனாவுக்குச் சென்றார். சீனாவிலும், அவர் சொகுசு கார்களில் பயணம் செய்தார், விலையுயர்ந்த நகைக் கடைகளுக்குச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.