யூடியூபர் ஜோதியின் டைரியை கைப்பற்றிய காவல்துறை - வெளியான அதிர்ச்சி தகவல்!
E. இந்து
ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த 33 வயதான பெண் ஜோதி மல்ஹோத்ரா. இவர் யூடியூபில் “டிரவல் வித் ஜோ” என்ற சேனலை நடத்தி வருகிறார். இவரை ஏறத்தாழ 4 லட்சம் பேர் யூடியூப்பில் பின்பற்றுகிறார்கள். இந்நிலையில், இந்திய ராணுவம் தொடர்பான தகவல்களை பாகிஸ்தானிற்கு சட்டவிரோதமாக தெரிவித்ததாக மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜோதி மல்ஹோத்ராவிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், ஜோதியின் வீட்டில் இருந்து அவரது டைரியை ஹரியானா காவல்துறையினர் கைப்பற்றினர்.
அந்த டைரியில் ஜோதி 10 நாட்கள் பயணமாக பாகிஸ்தானிற்கு சென்றது தெரியவந்தது. மேலும் அதில், “10 நாட்கள் பாகிஸ்தான் பயணத்திற்கு பிறகு இன்றுதான் நான் எனது நாடான இந்தியாவிற்கு திரும்பினேன். இந்த பயணத்தின்போது, பாகிஸ்தான் மக்களிடம் இருந்து எனக்கு அதிக அன்பு கிடைத்தது. அங்கு நமது சேனலின் சந்தாதாரர்கள் மற்றும் நண்பர்களை நான் சந்தித்தேன். லாகூரில் நான் இரண்டு நாட்கள் இருந்தேன்” என எழுதி இருந்தார்.
தொடர்ந்து, வண்ணமயமான பாகிஸ்தான் எனவும், பாகிஸ்தானில் தனது அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஜோதியின் பதிவுகள் ஒன்றில், பாகிஸ்தான் அதிகாரி ஒருவரிடம், “பாகிஸ்தானில் உள்ள கோவில்களை பாதுகாக்கவும், 1947ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதால், இந்தியர்களின் உறவினர்கள் பாகிஸ்தானில் பலர் உள்ளனர். அவர்களின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கவேண்டும்” என்று கேட்டதும் தெரியவந்துள்ளது.
மேலும், ஜோதியின் நிதி பரிவர்த்தனைகளும், பயண விவரங்களும் விசாரணை அமைப்பின் கண்காணிப்பில் உள்ளன.ஜோதியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினியை தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். அத்துடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜோதி மல்ஹோத்ராவிடம் தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட விசாரணையில், 2023ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் உயர் ஆணையத்திற்கு விசா பெறுவதற்காக ஜோதி சென்றபோது, அந்த ஆணையத்தின் அதிகாரியாக இருந்த எஹ்சான்-உர்-ரகும் என்ற டேனிஷூடன் தொடர்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.