உ.பி.| ’ஐ லவ் முகமது’ சர்ச்சை: கட்டடங்களை இடிக்க திட்டம்.. சொத்துகள் மீது நடவடிக்கை!
உபியில், ’ஐ லவ் முகமது’ சர்ச்சைக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் மௌலானா தௌகீர் ரசா கான் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குச் சொந்தமான எட்டு சட்டவிரோத சொத்துகளை அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் கான்பூரில் உள்ள ராவத்பூர் கிராமத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி பராவாஃபத் ஊர்வலத்தின்போது, நபிகள் நாயகத்தின் பிறப்பைக் குறிக்கும் வகையில், ‘ஐ லவ் முகம்மது’ என்ற பதாகையை இஸ்லாம் மக்கள் வைத்திருந்தனர். இது, ராம நவமி போன்ற இந்துப் பண்டிகைகளுக்குப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் பகுதியில் நிறுவப்பட்ட நடைமுறைகளைச் சீர்குலைக்கிறது என இந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இந்த மதக் கடவுள்களின் கொடிகள் கிழிக்கப்பட்டதாகவும், அந்த இடத்தை இஸ்லாம் மக்கள் ஆக்கிரமிக்க முற்பட்டதாகவும் கூறி இருதரப்புக்கும் மோதல் முற்றியது.
அதன்பேரில் போலீஸில் புகார் அளிக்கப்பட, ‘ஐ லவ் முஹம்மது’என்ற பலகையின்மீது கான்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதை எதிர்த்து, மாவட்ட நீதிபதி அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் செல்ல உள்ளூர் மதப் பிரமுகரான மௌலானா தௌகீர் ரசா கான் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பேரில் பரேலியில் உள்ள இஸ்லாமியா மைதானம் அருகே 1,000க்கும் மேற்பட்டோர் மத வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி வாகனங்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் வன்முறை மூண்டது. இதையடுத்து, மவுலானா தவுகீர் ரசாகான் உள்ளிட்ட 7 பேரைக் காவல்துறை கைது செய்தது. இதையடுத்து அவர்கள், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், ’ஐ லவ் முகமது’ சர்ச்சைக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் மௌலானா தௌகீர் ரசா கான் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குச் சொந்தமான எட்டு சட்டவிரோத சொத்துகளை அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக, பரேலி மேம்பாட்டு ஆணையம் (BDA) மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் குழுக்கள் ஜகத்பூரில் உள்ள ஃபைக் என்க்ளேவ் மற்றும் பழைய நகரப் பகுதிகளில் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த கட்டமைப்புகள் அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்கள் இல்லாமல் கட்டப்பட்டதாகவும், சில அரசு மற்றும் கூரை நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்பேரிலேயே இடிப்பு நடவடிக்கை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. மேலும், தௌகீரின் கூட்டாளிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பண உதவி செய்தார்களா என்றும் நிர்வாகம் தீவிரமாக விசாரித்து வருகிறது.