உ.பி.| 23 மாத சிறைவாசம்.. சமாஜ்வாதி மூத்த தலைவர் அசாம் கான் இன்று விடுதலை!
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் 23 மாதங்களுக்குப் பின் இன்று (செப்.23) விடுதலை செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அசாம் கான், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சருமாவார். இவர், கடந்த 2008ஆம் ஆண்டு சாஜ்லெட் காவல் நிலையம் அருகே சாலை மறியல் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக அவர்மீது வழக்கு பதியப்பட்டது. இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சீதாபூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இவ்வழக்கில், கடந்த வாரம் சிறப்பு எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார். இது தவிர, அவர் மீதான மற்ற வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த மாதத் தொடக்கத்தில், செப்டம்பர் 10ஆம் தேதி, ராம்பூரில் உள்ள துங்கர்பூர் காலனியில் வசிப்பவர்களைக் கட்டாயமாக வெளியேற்றியது தொடர்பான வழக்கில் அவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதைத் தொடர்ந்து, குவாலிட்டி பார் நில அபகரிப்பு வழக்கிலும் செப்டம்பர் 18 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் அசாம் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து, 23 மாத சிறைவாசத்திற்குப் பிறகு அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவரை, நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வரவேற்றனர். அவர் சிறையிலிருந்து வந்ததையொட்டி, சீதாபூர் நகரில் 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆசம் கானின் வழக்கறிஞர் முகமது காலித், ’’இந்த ஜாமீன் மூலம், அவரை சிறையில் வைத்திருக்கும் வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. அவர் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது’’ என்றும் கூறினார்.
பத்து முறை முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த கான் மீது உ.பி. அரசு பொய் வழக்குகளில் குற்றம்சாட்டியுள்ளதாக சமாஜ்வாதி குற்றம் சாட்டியுள்ளது. "முகமது அசாம் கான் சாஹேப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. குடும்பத்திற்கு இறுதியில் நீதி கிடைக்கும் என்பதை ஜாமீன் எடுத்துக்காட்டுகிறது. எங்கள் கட்சி அசாம் கான் குடும்பத்திற்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறது. துன்புறுத்தல் மற்றும் பொய் வழக்குகளுக்கு எதிராக பாஜகவை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடுவோம்" என்று சமாஜ்வாதியின் மூத்த தலைவர் ஷிவ்பால் சிங் யாதவ் கூறினார்.
பல ஆண்டுகளாக, பல்வேறு குற்றவியல் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய 16 முதல் தகவல் அறிக்கைகள் அசாம் கானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.