உ.பி.|‘ஐ லவ் முகம்மது’ பேரணி.. வெடித்த சர்ச்சை.. எச்சரிக்கை விடுத்த முதல்வர்!
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் ’ஐ லவ் முகம்மது’ பேரணியின்போது வன்முறை மூண்டது.
உத்தரப்பிரதேசம் கான்பூரில் உள்ள ராவத்பூர் கிராமத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி பராவாஃபத் ஊர்வலத்தின்போது, நபிகள் நாயகத்தின் பிறப்பைக் குறிக்கும் வகையில், ‘ஐ லவ் முகம்மது’என்ற பதாகையை இஸ்லாம் மக்கள் வைத்துள்ளனர். இது, ராம நவமி போன்ற இந்துப் பண்டிகைகளுக்கு பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் பகுதியில் நிறுவப்பட்ட நடைமுறைகளைச் சீர்குலைக்கிறது என இந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது இந்த மதக் கடவுள்களின் கொடிகள் கிழிக்கப்பட்டதாகவும், அந்த இடத்தை இஸ்லாம் மக்கள் ஆக்கிரமிக்க முற்பட்டதாகவும் கூறி இருதரப்புக்கும் மோதல் முற்றியுள்ளது.
அதன்பேரில் போலீஸில் புகார் அளிக்கப்பட, ’ஐ லவ் முஹம்மது’ என்ற பலகையின்மீது கான்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை எதிர்த்து, மாவட்ட நீதிபதி அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் செல்ல உள்ளூர் மதபிரமுகரான மௌலானா தௌகீர் ரசா கான் அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில் பரேலியில் உள்ள இஸ்லாமியா மைதானம் அருகே 1,000க்கும் மேற்பட்டோர் மத வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி வாகனங்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் வன்முறை மூண்டது. இதையடுத்து, மவுலானா தவுகீர் ரசாகான் உள்ளிட்ட 7 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பீகாரின் பூர்னியாவில், AIMIM தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி, ”ஆசியாவின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள்தொகை இந்தியாவில்தான் வாழ்கிறது. உங்களுடைய இந்த எதிர்வினையின் மூலம் நீங்கள் என்ன மாதிரியான செய்தியை வழங்குகிறீர்கள்? பிறந்தநாள் வாழ்த்துகள், பிரதமர் மற்றும் முதலமைச்சர் பிறந்த நாள் போஸ்டர்கள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் இது கூடாதா? காதலைப் பற்றி யாரும் பேசுவதை அவர்கள் விரும்பவில்லை”என தெரிவித்தார்.
மறுபுறம், இந்த எதிர்ப்பு ஒருகட்டத்தில், மாவ், வாரணாசி, மொராதாபாத், உத்தராகண்ட், கர்நாடகா, குஜராத், பீகார் மற்றும் மகாராஷ்டிராவிலும் என எதிரொலிக்கத் தொடங்கி நாடு முழுதும் பரவியது. இந்த வன்முறைப் போராட்டங்களால் எஃப்.ஐ.ஆர்.கள் மற்றும் கைதுகள் என பல நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன. மேலும் 'ஐ லவ் முகமது' என்ற முழக்கங்கள் பல மாநிலங்களில் போராட்டங்களைத் தூண்டியதைத் தொடர்ந்து, அது இந்துக்கள் தரப்பிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்து குழுக்கள் மற்றும் அச்சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் கடவுள்கள் மீதான அன்பை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில், #ILoveMahadev மற்றும் #ILoveRam போன்ற ஹேஷ்டேக்குகளைப் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இன்னொரு புறம் ஐ லவ ரசகுல்லா என்ற ஹேஸ்டேக்குகளும் வைரலாகி வருகின்றன.