உ.பி. மகா கும்பமேளா: ‘ஐஐடி பாபா’ நுழையத் தடை... நடந்தது என்ன?
உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், முதல் நாள் மட்டும் ஒரு கோடியே 65 லட்சம் பேர் புனித நீராடியதாக அரசு தெரிவித்தது. இவ்விழா, 40 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், 'ஐஐடி பாபா' என அழைக்கப்படும் அபே சிங், மகா கும்பமேளாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த அபே சிங், ஐஐடி பாம்பேயின் முன்னாள் விண்வெளிப் பொறியாளர் ஆவார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் இருந்து விலகிய அவர், ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்.
ஆன்மீகத்தில் இணைந்தது குறித்து அவர், “நான் எப்போதும் அறிவியலால் ஈர்க்கப்பட்டேன். ஆனால் காலப்போக்கில், இன்னும் ஆழமான ஒன்றைத் தேட வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். நான் மும்பையில் எனது வேலையை விட்டுவிட்டு கலைகளில் மூழ்கத் தொடங்கியபோது எனது ஆன்மீக பயணம் தொடங்கியது. இது இறுதியில் என்னை ஆன்மீகத்திற்கு அழைத்துச் சென்றது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அபே சிங்கின் குருவான மஹந்த் சோமேஷ்வர் பூரிக்கு எதிராக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக பிரயாக் ராஜ் நகர் முழுவதும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜூனா அகாரா குழு, “மஹந்த் சோமேஷ்வர், ஜூனா அகாராவின் ஓர் உறுப்பினர். இந்தக் குழுவுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. தவிர, இந்தக் குழுவை தகாத வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். மேலும், அவர் சாது அல்ல. ஒரு வழிப்பறி. அவருடைய கருத்துக்காகவே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். மேலும், அவர் யாருடைய சீடரும்கூட இல்லை” எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், அபே சிங் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர், “அந்தக் குழுவில் உள்ளவர்கள் என்னைப் பற்றி வதந்திகளைப் பரப்புகின்றனர். பிரபலமாக இருப்பதால், அவர்களைப் பற்றி நான் ஏதாவது அம்பலப்படுத்தலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான், நான் ரகசியமாக தியானத்திற்குச் சென்றதாக அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் முட்டாள்தனமாகப் பேசுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.