Rs 2,000,000,000,000 | அடேங்கப்பா.! மகா கும்பமேளா உ.பி.-க்கு இத்தகை கோடிகள் பொருளாதாரம் ஈட்டுமா?
40 கோடி பேர் கூட வாய்ப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா இன்று தொடங்கியுள்ளது. உலகிலேயே மக்கள் ஓரிடத்தில் கூடும் நிகழ்வுகளில் முதன்மையானது. இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கை ஆயிரங்கள் அல்ல லட்சங்கள் அல்ல கோடிகளை தொடுகிறது.
விழா நடைபெற உள்ள ஒன்றரை மாதங்களில் பிரயாக் ராஜில் 40 கோடி பேர் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்கள் கூட்டம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் மக்கள் தொகையைவிட அதிகம்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிப்பது எந்த ஒரு அரசுக்கும் இமாலய சவாலான பணி. அசம்பாவிதங்கள் எதுவுமின்றி விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் கடந்த ஓராண்டாகவே திட்டமிடப்பட்டு தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது. மக்களை வழிநடத்திச்செல்லும் பணி முழுமையும் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
விழாவிற்கு வரும் ஒவ்வொருவரையும் எண்ணி கூட்டம் ஓரிடத்தில் அதிகளவு குவிந்தால் உடனடியாக ஏஐ கேமராக்கள் காவல்துறையினரை உஷார்படுத்தும். இதற்காக 328 ஏஐ கேமராக்கள் நகரெங்கும் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர வழக்கமான கண்காணிப்புக்கென 2 ஆயிரத்து 751 சாதாரண கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
முதல்நாளான இன்று மட்டுமே சுமார் 50 லட்சம் பேர் கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்றும் இணையும் இடத்தில் குவிந்துள்ளனர். மொத்தம் 40 கோடி பேர் வரை வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒருவருக்கு தலா ரூ.5 ஆயிரம் செலவு செய்தால் கூட மொத்தமாக சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரை பொருளாதாரம் நடைபெற வாய்ப்புள்ளது.
மற்றொரு தகவலின் படி ஒருவருக்கு தலா ரூ.10 ஆயிரம் வரை கூட செலவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அதனால், 4 லட்சம் கோடி ரூபாய் வரை பொருளாதாரம் நடைபெற வாய்ப்புள்ளது.
2019 ஆம் ஆண்டு மெகா கும்பமேளா முடிவில் உத்தரபிரதேச பொருளாதாரத்திற்கு ரூ.1.2 லட்சம் கோடி பங்களிப்பு செலுத்தியுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருந்தார். அப்போது 24 கோடி பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.