மகா கும்பமேளா|புனித நீராடிய ஒரு கோடியே 65 லட்சம் பேர்!
மகா கும்பமேளாவில் முதல் நாளான நேற்று ஒரு கோடியே 65 லட்சம் பேர் புனித நீராடிய நிலையில் இன்று மிக முக்கியமான அமிர்த குளியல் நிகழ்வு தொடங்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொது மக்கள் கூடும் நிகழ்வான மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நேற்று தொடங்கியது. 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஒரு கோடியே 65 லட்சம் பேர் புனித நீராடியதாக அரசு தெரிவித்தது. 40 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் மிக முக்கிய நிகழ்வான அமிர்த குளியல் இன்று தொடங்கியுள்ளது.
இதற்காக மிக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்மாநில அரசு செய்துள்ளது. தற்போது நடைபெறுவது 144 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு என்பதால் அடுத்த ஒன்றரை மாதங்களில் சுமார் 40 கோடி பேர் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மலைக்குகைகள், வனங்களில் வசிக்கும் நாகா சாதுக்கள், விதவிதமான தோற்றம் கொண்ட துறவிகள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இந்தியா தவிர பிரேசில், தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
மறைந்த ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரீன் பவல் ஜாப்ஸ்; துறவியாக மாறி இந்நிகழ்வில் பங்கேற்றுள்ள அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் மைக்கேல் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கவனம் கவர்ந்துள்ளனர். வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்நிகழ்வை பதிவு செய்ய உலகெங்கும் இருந்து செய்தியாளர்கள் குவிந்துள்ளனர்.