லிவ்-இன் உறவு | மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ஆளுநர்.. எழும் விமர்சனம்!
உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் பெண்கள் திருமணம் செய்யாமல் லிவ் இன் உறவில் ஈடுபட்டால் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள் என கல்லூரி மாணவிகளிடையே பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பல பெருநகரங்களில் மட்டுமின்றி இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து நகரங்களிலும் காதல் ஜோடிகள் லிவ்-இன் உறவில் இருப்பது அதிகரித்துவருகிறது.. இந்த லிவ் இன் உறவு என்பது திருமணத்திற்கு முன் தம்பதிகள் தாங்கள் ஒன்றாக வாழ்ந்து பார்க்கும் முறையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கல்லூரி முடித்து பணியில் இருக்கும் 23 வயதிற்கும் மேலான இளைஞர்கள்தான் லிவ்-இன் உறவில் அதிகம் இருப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது.
இந்நிலையில் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் பெண்கள் திருமணம் செய்யாமல் லிவ் இன் உறவில் ஈடுபட்டால் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள் என கல்லூரி மாணவிகளிடையே பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 47வது பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் உத்தரப் பிரதேச ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆனந்திபென் படேல் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய ஆளுநர் ஆனந்திபென் படேல் இப்போதெல்லாம் 'லிவ்-இன்' உறவுகள் பல நடந்து வருகிறது.. அந்த லிவ்-இன் உறவிலிருந்து விலகி இருங்கள். உங்கள் வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளை கவனமாக எடுங்கள்.. அப்படி இல்லையெனில் நீங்கள் அந்த பெண்களை 50 துண்டுகளாகதான் பார்ப்பீர்கள்,'' என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் லிவ்-இன் உறவுகளின் விளைவுகளைப் பார்க்க நீங்கள் விரும்பினால், அனாதை இல்லங்களுக்குச் சென்று பாருங்கள். அங்கு 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள், தங்கள் கைகளில் பச்சிளம் குழந்தைகளுடன் தனியாக கஷ்டப்படுகிறார்கள்.. லிவ்-இன் உறவுகள் தற்போது நாகரீகமாக இருக்கலாம், ஆனால் அதில் ஈடுபட வேண்டாம். லிவ் இன் உறவுகளில் ஈடுபடும் பெண்கள், 50 துண்டுகளாக வெட்டப்பட்டதாக வந்த செய்திகளை கண்டு அதிர்ச்சியடைந்தேன். லிவ் இன் உறவில் ஈடுபட்டால் நீங்களும் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள். 'கடந்த பத்து நாட்களாக இந்த லிவ் இன் உறவு குறித்த செய்திகளை நான் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறேன். இது எனக்கும் மிகுந்த வேதனையை அளிக்கிறது என்றார்.
அத்துடன் ஒரு நீதிபதியுடனான தனது உரையாடலை பற்றிக்கூறியவர், மகள்களின் பாதுகாப்பு குறித்து நீதிபதியும் கவலை தெரிவித்ததாகக் கூறினார். ''பெண்கள் லிவ்-இன் உறவுகளுக்கு இரையாகிவிடுவதை தடுக்க பல்கலைக்கழகங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதை படேல் கூறினார். அதுமட்டுமல்லாமல் பெண்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். தவறான முடிவுகளால் உங்கள் நிம்மதியை இழக்க நேரிடும். அதனால் எப்போது எதிலும் கவனமாக இருப்பது நல்லது என எச்சரித்தார்.
இந்நிலையில், ஆளுநரின் இந்த பேச்சு தற்போது சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்று வருகிறது. இதே போல இதற்கு முன்னதாக, பிரபல இந்து மதத் துறவிகளான அனிருத்தாச்சார்யா மற்றும் பிரேமானந்தா மகாராஜ் ஆகியோர் லிவ்-இன் உறவுகள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது..