கவின் ஆணவக் கொலை| சுர்ஜித் தந்தை எஸ்.ஐ சரவணன் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஐடி ஊழியர் கவின் படுகொலை வழக்கில், கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணனின் ஜாமீன் மனு நெல்லை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயியான இவரின் மகன் 26 வயதான கவின்குமார், சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஐடி ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஜுலை மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த கவின் காதல் விவகாரத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டையே உலுக்கிய ஆணவக்கொலை சம்பவத்தில் கவின் காதலித்த பெண்ணின் தம்பி சுர்ஜித், அவரின் தந்தை எஸ் ஐ சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி-க்கு மாற்றியது.
இந்நிலையில், ஜாமீன் கோரி நெல்லை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் எஸ்.ஐ சரவணன் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி, இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஹேமா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையின்போது, சரவணன் தரப்பு வழக்கறிஞர், "சரவணனின் மனைவி தலைமறைவாக இல்லை, விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறார். சரவணன் சாட்சிகளை கலைக்க மாட்டார்" என்று வாதிட்டார்.
ஆனால், அரசுத் தரப்பும், கவின் தரப்பு வழக்கறிஞர்கள், "ஜாமீன் வழங்கினால் சாட்சிகள் கலைக்கப்பட வாய்ப்புள்ளது" என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஹேமா, எஸ்.ஐ. சரவணனின் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு நெல்லை நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஒருமுறை அவரின் ஜமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் எஸ் ஐ சரவணனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
செய்தியாளர் - சீ. பிரேம்குமார்