”அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுகவினர் பரப்பும் வதந்தி” - திருமாவளவன் கருத்து
அதிமுக மற்றும் தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்சியில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் திருமாவளவன் இன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்றார்.
அப்போது, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதில், “ கரூரில் த.வெ.க கூட்டத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதி உதவி அளிக்க உள்ளோம். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறோம். தொடர்ந்து, நெரிசலால் ஏற்பட்ட இறப்புகள் வெளிப்புற நிலை தூண்டுதலால் ஏற்பட்ட இறப்பு என த.வெ.க தரப்பில் கூறுகிறார்கள். கூட்ட நெரிசலில் ஏற்படும் உயிரிழப்புகள் புற தூண்டுதலால் நடப்பது அல்ல. நெரிசல் உயிரிழப்புகள் பல சம்பவங்களில் நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி. அதிமுகவும் பா.ஜ.கவும் கூட்டணியில் இருக்கும் சூழலில் விஜய் தன் கொள்கை எதிரியாக கூறும் பா.ஜ.க அங்கு வகிக்கும் கூட்டணியில் இடம் பெறுவாரா என்பது தெரியவில்லை. அப்படி கூட்டணி வைத்தால் பா.ஜ.க வை கழட்டி விட அதிமுக தயாராக இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது. அப்படி பா.ஜ.க வை கழட்டி விட்டால் அதிமுகவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அக்டோபர் 8 ஆம் தேதி பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அக்கூட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித்தொண்டர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது தவெக கொடி பரப்புரை கூட்டத்தில் காட்டப்பட்டது.
இதைப்பார்த்த அவர், மகிழ்ச்சியுடன் “கொடி பறக்குது... பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க...” எனக்கூறினார். இதையடுத்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். இந்நிலையில், தவெக கொடி காட்டியது அதிமுக தொண்டர் தான் எனப் பலத் தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - சீ. பிரேம்குமார்