உத்தர பிரதேசத்தில் 5வது முதலீட்டாளர் மாநாடு: ரூ.5 லட்சம் கோடி முதலீட்டு திட்டங்கள்!
பிரதமர் மோடியின் 11 ஆண்டு ஆட்சியில் இந்தியாவிலேயே அதிகப்பலன் பெற்ற மாநிலம் என்று உத்தர பிரதேசத்தை சொல்லலாம். சென்ற 11 ஆண்டுகளில் பல கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை உத்தர பிரதேசத்திற்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது மோடி அரசு. தவிர, முதலீட்டு அளவிலும், ஏராளமான தொழிற் திட்டங்களை அங்கே கொண்டு சென்றிருக்கிறது. மத்திய அரசு ஆதரவுடன் சென்ற எட்டரை ஆண்டுகளில் மட்டும் தன்னுடைய ஆட்சியில் 15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான முதலீட்டு முன்மொழிவுகள் உத்தர பிரதேசத்திற்கு வந்திருப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.
நவம்பரில் நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும், அம்மாநில முதலமைச்சர் உத்தரவின்பேரில் அதற்கான தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இதற்கு முன் நடந்த 4 GROUND BREAKING CEREMONYகளில் மாநிலத்தில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தொழில் வளர்ச்சி திட்டங்களுக்காக நிலம் ஒதுக்கும்போது, அது நியாயமான இழப்பீட்டுடன், உரிமையாளர்களின் உணர்வுகளை பாதிக்காத வகையில் இருக்க யோகி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 3 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத நிலங்களை மீண்டும் பதிவு செய்து புதிய முதலீட்டாளர்களுக்கு ஒதுக்க அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி போன்ற தொழில்களில் கவனம் செலுத்தி, மாநிலத்தின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கையை எடுக்க அவர் அதிகாரிகளை வலியுறுத்தியதாகவும், நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் யமுனா மண்டலங்களில் ஃபின்டெக் ஹப் ஒன்றை உருவாக்க உத்தரவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் நேரில் அரசு அலுவலகங்களுக்குச் செல்ல தேவையில்லாமல், ஆன்லைன் வாயிலாக முதலீடு செய்வதை எளிமையாக்கும் விதமாக NIVESH MITRA மற்றும் NIVESH SARATHI போர்ட்டல்களை மேம்படுத்த யோகி உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பற்றி பேசிய யோகி ஆதித்யநாத், இந்த மாற்றங்கள் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு எனக் குறிப்பிட்டார்.