”அவர் முகத்தில் எப்போதும் புன்னகை இருக்கும்..” - ரோபோ சங்கருக்கு இர்ஃபான் பதான் இரங்கல்
சின்னத்திரையில் ஸ்டாண் அப் காமெடியானாகவும், மிமிக்ரி கலைஞராகவும் பிரபலமடைந்த நடிகர் ரோபோ சங்கர், தனுஷின் மாரி, விஜயின் புலி, அஜித்தின் விஸ்வாசம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் போன்ற பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தார்.
தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ரோபோ சங்கர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரோபோ சங்கருக்கு இர்ஃபான் பதான் இரங்கல்..
கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான். இப்படத்தில் இர்ஃபான் பதான் உடன் ரோபோ சங்கரும் நடித்திருந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தின்போது பணிவாக நடந்துகொண்டதாக கூறி, ரோபோ சங்கர் இறப்புக்கு இர்ஃபான் பதான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இர்ஃபான் பதான், “ரோபோ சங்கரின் மறைவை அறிந்து மனம் உடைந்தேன். அவர் மிகவும் விரைவாகவே மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் தமிழ் படத்தில் ஒன்றாக வேலை செய்தோம். அவர் எப்போதும் மிகவும் பணிவாக நடந்துகொள்வார், நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் அவரது முகத்தில் ஒரு புன்னகை இருந்தது” என்று கூறியுள்ளார்.