உத்தரப் பிரதேசம் 4 மாநிலங்களாகப் பிரிக்கப்படுமா? மாயாவதி நினைத்தபோது நடந்தது என்ன?
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தரப்பிரதேசம். இம்மாநிலத்தின், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தின் அரசியல் களம் தற்போது சூடுபிடித்திருக்கிறது. அதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், அம்மாநில அமைச்சரும் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் (SBSP) தலைவருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர், பேசியுள்ள கருத்துக்கள் தான் தற்போது தேசிய அளவிலான விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்றக் கூட்டம் ஒன்றில் பேசிய ஓம் பிரகாஷ், வரும் காலங்களில் உத்தரப் பிரதேசம், பூர்வாஞ்சல், மத்தியாஞ்சல், புந்தேல்கண்ட் மற்றும் ஹரித் பிரதேசம் என 4 மாநிலங்களாக உருவாக்கப்படும் எனவும் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பேசினார். மேலும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் தான் பேசியிருப்பதாகவும் தெரிவித்தார். இவர் சார்ந்த ராஜ்பர் சமூகத்தினர், பூர்வாஞ்சல் பகுதியில் அதிகமாக இருப்பதால், அப்பகுதி தனி மாநிலமாகும் பட்சத்தில் அவர் சார்ந்த சமூகத்தினரோ அல்லது அவரது மகனோ முதலமைச்சர் ஆகலாம் என்பது திட்டமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்தை 4 மாநிலங்களாகப் பிரிப்பது குறித்து மத்திய அரசோ அல்லது அவரது கட்சி கூட்டணியில் இருக்கும் பாஜகவோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எனினும், இந்த உத்தரப் பிரதேசத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்றோ நேற்றோ தொடங்கியது அல்ல. 1950-களிலேயே, மேற்கு உத்தரப் பிரதேசத்தை தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. காலப்போக்கில் பூர்வாஞ்சல், புந்தேல்கண்ட் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தை உள்ளடக்கிய ஹரித் பிரதேசம் போன்ற தனி மாநிலக் கோரிக்கைகள் எழுந்தன. இதற்கிடையில், கடந்த 2011-ம் ஆண்டு, அப்போதைய உத்தரப் பிரதேச முதலமைச்சர் மாயாவதி, மாநிலத்தை 4 ஆகப் பிரிக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். இதற்குப் பிறகு பேசியிருந்த மாயாவதி, "நாங்கள் எங்கள் கடமையைச் செய்துவிட்டோம், இனி அது மத்திய அரசின் பொறுப்பு" எனக் கூறியிருந்தார்.
அப்போது பூர்வாஞ்சல், புந்தேல்கண்ட், அவத் பிரதேசம் மற்றும் பச்சிம் பிரதேசம் என 4 மாநிலங்களை உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்மானம் மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை எட்டவில்லை. இதனால் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. உத்தரப்பிரதேசத்தில், அடுத்து ஆட்சிக்கு வந்த சமாஜ்வாதி கட்சியும் மாநில பிரிவினைய முன்னெடுக்கவில்லை. அதேசமயம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது பிரிவின்படி, ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றுவது அல்லது புதிய மாநிலத்தை உருவாக்குவது தொடர்பான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது.
இவ்வாறு, 2027 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், ஓம் பிரகாஷ் ராஜ்பரின் இந்தக் கருத்து மீண்டும் மாநிலப் பிரிவினை குறித்த விவாதத்தை அரசியல் களத்தில் கொண்டு வந்துள்ளது.

