சாலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பீகாரில் அட்டூழியம் செய்த கும்பல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
பீகார் மாநிலம் ஜமுய் என்ற பகுதியில், 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது சக மாணவரோடு டியூசன் மையத்தில் படித்து வந்துள்ளார். இரவு நேரத்தில் டியூசன் முடிந்ததும் அந்த மாணவி அந்த மாணவரோடு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது, கிராமப்பகுதியில் திடீரென ஒரு கும்பல் அந்த இரு சக்கர வாகனத்தை மறித்துள்ளது. பின்னர் அந்த மாணவனை அடித்து அவனை வலுக்கட்டாயமாகச் சிறுமியிடமிருந்து பிரித்த அக்கும்பல், தனித்து விடப்பட்ட அந்தச் சிறுமியை ஈவு இரக்கமின்றி தரதரவென இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், அந்த மாணவர் அங்கிருந்து செல்லாமல் அந்த மாணவிக்கு உறுதுணையாக அவருடனே இருந்துள்ளார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றும் அந்த கும்பல் அவர்களை விரட்டி சென்று பிடித்து தாக்கியுள்ளனர். மேலும், அந்த மாணவியை சுற்றிலும் வட்டமிட்டு நின்று, அவரது பெயர், அப்பா பெயர், முகவரி, செல்போன் எண்ணை கேட்டு மிரட்டியுள்ளனர்.
மாணவி நீண்ட நேரம் கெஞ்சியும் அவரிடம் தொடர்ந்து அந்த கும்பல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. பின்னர் அந்த கிராமப்பகுதியை சேர்ந்த சிலர் அவர்களை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இதனை எல்லாம் அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், அது வைரலாகியுள்ளது.
பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த பீகார் காவல்துறையினர், 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை தேடி வருவதாக ஜமுய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வஜித் தயாள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். பீகாரின் ஜமுய் பகுதியில் இருந்து வெளியாகியுள்ள வீடியோ மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்றும், பள்ளி மாணவர்கள் இருவர் வழிமறிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டுள்ளனர். வீடியோவில் உள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்யவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் சாலையில் மாணவிக்கு ஒரு கும்பலால் நேர்ந்துள்ள இந்த பாலியல் துன்புறுத்தல் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

