”பெருநிறுவன கொள்ளைக்கான சட்டப்பூர்வ முத்திரை; மத்திய பட்ஜெட் 2026” - எம்.எச். ஜவாஹிருல்லா
2026-2027 ஆம் ஆண்டுக்கான நாட்டின் பட்ஜெட்டை நேற்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில், இந்த மாநிலங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படும் எனவும், அதிகளவில் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த மாநிலங்களுக்கு எதிர்பார்த்த அளவில் நிதி மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.
தொடர்ந்து, நாட்டின் முக்கியப்பிரச்சனைகள் இந்த பட்ஜெட்டில் கண்டுகொள்ளப்படவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்திருந்தார். அதேசமயம், தமிழகத்தில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையம் என்ற பெயரில் அதைச் சுரண்டுவதற்கான முயற்சியில் ஈடுபடவிருக்கிறார்கள் எனவும் எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான், மத்திய நிதிநிலை அறிக்கை 2026 என்பது பெருநிறுவன கொள்ளைக்கு அளிக்கப்பட்டிருக்கும் சட்டப்பூர்வ முத்திரை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மத்திய பட்ஜெட் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஐவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பில்லா இளைஞர்கள், விலைவாசி உயர்வால் வாடும் நடுத்தர மக்கள், கடன் சுமையில் சிக்கிய விவசாயிகள் – இவர்களுக்கான ஒரு தீர்வும் இல்லாத இந்தப் பட்ஜெட், தேர்ந்தெடுக்கப்பட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் வரிச்சலுகைகள், சலுகைத் திட்டங்கள், சொத்து ஒப்படைப்பு ஆகியவற்றை வாரி வழங்கும் பகிரங்கக் கொள்ளை ஆவணமாக உள்ளது.
எடுத்துக்காட்டாகத் தனிநபர்களிடம் வசூலிக்கப்படும் வருமான வரி மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் பங்கு மீண்டும் அதிகரித்து 21% ஆக உள்ளது. அதே நேரத்தில், பெரு நிறுவனங்களிடமிருந்து (Corporate tax) கிடைக்கும் வருவாய் 18% மட்டுமே. மோடி ஆட்சியில் கடந்த ஒரு தசாப்தமாகப் பெரு நிறுவனங்களுக்கும் சாதகமாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு மீதான ஒன்றிய அரசின் அரசியல் பழிவாங்கல், இந்தப் பட்ஜெட்டில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரச் சுமையைத் தூக்கும் மாநிலங்களில் முதன்மையான தமிழ்நாட்டுக்கு, இந்தப் பட்ஜெட்டில் உரிய இடமோ, மரியாதையோ இல்லை.குறிப்பாக, மெட்ரோ ரயில் திட்டம் தமிழ்நாட்டு மக்களின் அத்தியாவசிய பொதுப் போக்குவரத்து தேவையாக இருக்கும் நிலையில், அதற்கான மத்திய நிதி ஒதுக்கீடு குறித்து இந்தப் பட்ஜெட் திட்டமிட்ட மௌனத்தைக் கடைப்பிடித்துள்ளது. இந்த ஒன்றிய பட்ஜெட், தமிழ்நாட்டுக்கு எதிரானது, மாநில சுயாட்சிக்கு எதிரானது, சமூகநீதிக்கு எதிரானது. தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை மறுக்கும் இந்த அரசியல் அணுகுமுறையை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிறுபான்மையினரையும் இந்த பட்ஜெட் வஞ்சித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

