மத்திய பட்ஜெட் 2026 | கேரளா, மேற்கு வங்கத்துக்கும் திட்டங்கள் இல்லை.. அசாம் மாநிலத்துக்கும் குறைவு!
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், கேரளாவிலும் அரிய வகை கனிம வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் கடலோர பகுதிகளில் தென்னை, சந்தன மரம், கோகோ, முந்திரி ஆகியவற்றை பயிரிட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் முந்திரி பருப்பு, கோகோ ஆகியவை சர்வதேச பிராண்ட் ஆக மாறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஆமைகள் பாதை சுற்றுலா முன்னெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் உணவுகளை சுங்க வரி இன்றி இறக்குமதி செய்வதற்கான வரம்பை 1 சதவிகிதத்தில் இருந்து 3 சதவிகிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்க மாநிலத்துக்கும் மத்திய பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் இடம்பெற்றன. மேற்கு வங்கம் - குஜராத் இடையேயான சரக்கு ரயில்களுக்கென பிரத்யேக பாதை அமைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியை உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியுடன் இணைக்கும் அதி வேக ரயில்தடம் அமைக்கப்படும் என்றும் மத்திய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கிழக்கு கடற்கரை தொழில்வழித்தடத்தில் மேற்கு வங்கத்தின் துர்காபூரை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 22 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அசாமின் தேஷ்பூரில் தேசிய மன நல சுகாதார மையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அசாமில் உள்ள புத்த கோயில்கள், நினைவு சின்னங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் திட்டம் மேம்படுத்தப்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
முந்தைய பட்ஜெட்டுகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அதிகளவில் அறிவிப்புகள் இடம்பெற்ற நிலையில் இம்முறை தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரிய அளவில் திட்டங்கள் இல்லை என்பது கவனம் பெறுகிறது

