மத்திய பட்ஜெட் 2026 | வளர்ச்சி.. ஏமாற்றம்.. அரசியல் தலைவர்களின் ஆதரவும்.. எதிர்ப்பும்!
நாட்டின் 88-வது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்தலை மனதில் வைத்து இம்மாநிலங்களுக்கு கூடுதலாக திட்டங்களும், நிதிப்பகிர்வுகளும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம், பட்ஜெட் தாக்கல் நடைபெறுவதற்கு முன் தமிழக முதல்வர் வெளியிட்டிருந்த எக்ஸ் தளப் பதிவில், “தேர்தலை மனதில் வைத்தேனும், நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். ஆனால், மாநில நிதிப் பகிர்வு 41% சதவீதம் என்பதே தொடரும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்களின் கருத்து என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
’’பட்ஜெட் முக்கியமானது’’ - பிரதமர் மோடி
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் முக்கியமானது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார். 2047-இல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடையும் வகையில் பட்ஜெட் உள்ளது. மேலும், இந்தப் பட்ஜெட்டில் பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது
”பெரும் ஏமாற்றம்” - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
”பெரிதும் எதிர்பார்த்திருந்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வழக்கத்தைவிட பெரும் ஏமாற்றம். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தாண்டாவது பாஜக அரசின் கண்களுக்கு தமிழ்நாடு தெரியும் என எதிர்பார்த்திருந்தோம். அந்த எதிர்பார்ப்பை பொய்க்கச் செய்து ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டிற்கான புதிய திட்டங்கள் இடம்பெறாதது மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிச்சமாக்கியுள்ளது. வழக்கமாக நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் திருக்குறளும் இம்முறை இடம் பெறவில்லை; நிதிநிலை அறிக்கை மொத்தத்தில் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்!
எடப்பாடி பழனிசாமி வரவேற்பு!
”மத்திய பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு, உலக அளவில் இந்தியா பொருளாதார நிலையில் வலுவான நாடாக உயர்வதற்கு வழிவகுக்கும் என்பதால், பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.”
’’மாற்றம் இல்லாத ஏமாற்றம்’’ - எம்.பி கனிமொழி
”மத்திய பட்ஜெட்டில், திருக்குறளும் இல்லை; தமிழ்நாட்டிற்கான எந்தத் திட்டங்களும் இல்லை. தேர்தல்கள் நடைபெற்றபோதிலும், மத்திய பாஜக அரசு, இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டை நினைவில் கொள்ளவில்லை. மத்திய பட்ஜெட் என்பது மாற்றம் இல்லாத ஏமாற்றம்.”
’’மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்’’ - தமிழிசை
இந்திய மக்களின் தேவையை பூர்த்தி செய்வதாக இந்த பட்ஜெடி உள்ளது. மேலும், மத்திய பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட்டாக உள்ளது. கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் ஏன் வரவில்லை என்றால் தமிழக அரசு அதற்கான திட்டத்தை சரியாக சமர்ப்பிக்கவில்லை.
”ப்ளஸ் மற்றும் மைனஸ் இரண்டும் உள்ளது” - பிரேமலதா விஜயகாந்த்
”விவசாயிகளுக்கு 40,000 கோடி பயோ ஆர்கானிக் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழ்நாட்டில் நதிகள் இணைப்பு, நீர் மேலாண்மை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. ஜிஎஸ்டி, டிடிஎஸ் போன்ற வரிகளுக்கு விலக்கு இல்லை. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை. இந்த பட்ஜெட் யானைப் பசிக்கு சோளப்பொரிதான்”.
”நமது வளங்களை சுரண்டுவதுதான் இந்த பட்ஜெட்” - எம்.பி சு.வெங்கடேசன்
”மத்திய பட்ஜெட் தமிழகத்திற்கு ஏமாற்றத்தை அளிக்கக்கூடிய பட்ஜெட்டாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, நமக்கு வஞ்சகத்தையும், நம்முடைய வளங்களைச் சுரண்டுவதும்தான் இந்த பட்ஜெட்டினுடைய அறிவிப்பு. புதிய கட்டமைப்புகள் சார்ந்து எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக, தமிழகத்தில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையம் என்ற பெயரில் அதைச் சுரண்டுவதற்கான முயற்சியில் ஈடுபடவிருக்கிறார்கள்”.
”அனைத்தும் வெறும் பொய் மூட்டை” - மம்தா பானர்ஜி
’’பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார வழித்தடங்கள் உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் வெறும் பொய் மூட்டை. ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களைத்தான் மத்திய அரசு புதியதுபோலக் காட்டிக் கொள்கிறது. மேற்கு வங்கத்தில் பிஜேபி தோல்வியடையும் என்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நிதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளது".
