இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்.. உதயநிதி படத்துடன் ராகுல்காந்தியை விமர்சித்து பேனர்கள்!
2024 மக்களவைத் தேர்தலில் 234 இடங்களைக் கைப்பற்றி, ஆளும் பாஜகவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது இந்தியா கூட்டணி. பாட்னாவில் தொடங்கி பெங்களூரு வரை 28 கட்சிகள் கைகோர்த்து நின்ற அந்த ஆரம்பகால எழுச்சி, தற்போது பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கூட்டணியின் அஸ்திவாரமாக இருந்த தமிழ்நாட்டில், காங்கிரஸ்-திமுக உறவில் ஏற்பட்டுள்ள முறிவு, தேசிய அளவில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததால் ஏற்பட்ட விரிசல் காரணமாக, திங்கட்கிழமை டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனையை புறக்கணிப்பதாக திமுக அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்தசூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. அப்போது, ஏற்கனவே மக்களவையில் தோல்வியுற்ற தொகுதி மறுவரையறை மசோதாவை, பாஜக அரசு மீண்டும் கொண்டுவர இருக்கிறது என தகவல் வெளியாகிவரும் நிலையில் தான், இண்டியா கூட்டணியின் 5-வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில், 23 கட்சிகள் கலந்து கொள்ளவிருப்பதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பதாகைகள் டெல்லி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. அதில், 20 ஆண்டுகளாக நம்மை சார்ந்து வளர்ந்த காங்கிரஸ் இன்று நம் முதுகில் குத்தி விட்டது என தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுவது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், காங்கிரஸ் கட்சி அதன் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது; எனவே நாம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த இருக்க முடியாது என மம்தா பானர்ஜி கூறுவது போன்ற வாசகங்களும், ராகுல் காந்தியிடம் நிலைத்தன்மை இல்லை என சரத்பவார் கூறுவது போன்ற வாசகங்களும், காங்கிரஸ் கட்சியை நாம் பலவீனப்படுத்த வேண்டாம் அந்த வேலையை ராகுல் காந்தியை சிறப்பாக செய்கிறார் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறுவது போன்ற வாசகங்களும் பதாகைகளில் இடம்பெற்றுள்ளன.

