
\

மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே 4,096 கிலோமீட்டர் நீளமுள்ள சர்வதேச எல்லை உள்ளது. இதில் பல இடங்கள் ஆறுகள், சதுப்புநிலங்கள் மற்றும் காடுகளைக் கொண்டிருப்பதால், எளிதாகக் கடக்கக்கூடியதாக உள்ளது. இந்தச் சூழலில் தான், வேலைவாய்ப்புக்காகவும், பொருளாதார காரணங்களுக்காகவும் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக எல்லையை கடந்து இந்தியாவிற்குள் நுழைவதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்க மக்களும் வங்கதேச மக்களும் ஒரே மாதிரியான பெங்காலி மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டிருப்பதால், குடியேறியவர்கள் உள்ளூர் மக்களுடன் எளிதில் கலந்து விடுகின்றனர் எனவும் ஏற்கனவே அதிக மக்கள்தொகை கொண்ட மேற்கு வங்கத்தில், சட்டவிரோத குடியேற்றங்களால் நிலம், குடிநீர், ரேஷன் பொருட்கள் மற்றும் அரசு மருத்துவமனை சேவைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது எனவும் அம்மாநில மக்கள் குற்றஞ்சாடி வருகின்றனர்.
இந்தசூழலில் தான், மேற்குவங்க தேர்தலில் வெற்றி பெற்றால், சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை மாநிலத்தில் இருந்து வெளியேற்றுவோம் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. மே - 4ம் தேதி வெளியான முடிவுகளின் படி, தொடர்சியாக 3 முறை ஆட்சி செய்து வந்த திரிணமூல் காங்கிரஸை தோற்கடித்து பாஜக வென்றிருக்கிறது. சுவேந்து அதிகாரி முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் நிலையில், அவரது தலைமையிலான அரசு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் முயற்சிகளை தொடங்கியுள்ளது.
கடந்த மே-23 ம் தேதி மேற்குவங்க உள்துறை மற்றும் வனவிவகாரங்கள் துறை வெளியிட்ட உத்தரவில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் அவர்களை வெளியேற்றும் வரை தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மேற்குவங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, சட்டவிரோதமாக குடியேறிகளை நாடு கடத்தியது குறித்துப் பேசியிருக்கிறார். அதன்படி, சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கையாள்வதும், இந்தியா-பங்களாதேஷ் எல்லையைப் பாதுகாப்பதும் தனது அரசின் முக்கிய முன்னுரிமைகளாகத் தொடர்கின்றன எனவும் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை 4,800 சட்டவிரோத குடியேறிகள் வங்க தேசத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் எனவும் 836 பேர் தற்போது நாடு திரும்புவதற்காகக் காத்திருக்கின்றனர் எனவும் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச எல்லை பகுதியில் சுமார் 100 கி.மீ. தூரத்துக்கு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்பட்டாலும், இதன் நடைமுறை குறித்து அரசியல் மற்றும் மனித உரிமை விவாதங்கள் மேற்குவங்கத்தில் தொடர்ந்து எழுந்து வருகின்றன.