ஜம்மு - காஷ்மீர் | பூஞ்சில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு.. 2 பயங்கரவாதிகள் பலி!
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக, ஜம்மு-காஷ்மீரின் தாரா அருகே உள்ள லிட்வாஸ் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில், பாதுகாப்புப் படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது டாச்சிகம் தேசியப் பூங்காவிற்கு அருகிலுள்ள ஹர்வான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் மகாதேவ்' எனப் பெயரிடப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகள், பஹல்காம் தாக்குதலின் தொடர்புடையவர்கள் என்றும் அதில் சுலேமான் ஷா என்ற பயங்கரவாதியும் மூளையாகச் செயல்பட்டவர் எனவும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், கொல்லப்பட்ட மூவரும் பாகிஸ்தானியர்கள் எனவும், அவர்கள், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்தவர்கள் எனவும் ராணுவம் தெரிவித்திருந்தது. இதையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தின்போது உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் நடந்த ஒரு மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்று காலை, பூஞ்ச் செக்டாரில் இரண்டு நபர்களின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை இந்திய ராணுவம் கவனித்துள்ளது. இதையடுத்து, இருதரப்புக்கும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் அந்த இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அறியப்படுகிறது.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் நளின் பிரபாத், இந்தியாவுக்குள் ஊடுருவிய இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.