பீகார் | ரூ.100 கோடியில் சாலை.. நடுவில் நிற்கும் மரங்கள்.. நடந்தது என்ன?
பெருகிவரும் வாகன நெருக்கடிகளால் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக இருபுறமும் உள்ள பெரிய மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. சாலை அமைக்கப்பட்ட பின்னர், மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் பீகாரில் மரங்களையே வெட்டாமல் ரூ.100 கோடி அளவுக்கு சாலை போடப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஜெகனாபாத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்குள்ள பாட்னா - கயா பிரதான சாலையில், புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 7.48 கி.மீ நீளமுள்ள அந்தச் சாலையின் உள்ள மரங்கள் எதுவும் வெட்டப்படவில்லை. அவையனைத்தும் சாலையில் உயரமாக வளர்ந்து நிற்கின்றன. இதனால் பயணிகள், தற்போது விபத்துகளுக்கு ஆளாகிறார்கள்.
முன்னதாக, மாவட்ட நிர்வாகம் ரூ.100 கோடி சாலை விரிவாக்க திட்டத்தை மேற்கொண்டபோது, மரங்களை அகற்ற அனுமதி கோரி வனத்துறையை அணுகினர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, வனத்துறை 14 ஹெக்டேர் வன நிலத்திற்கு இழப்பீடு கோரியது. இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தால் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. மேலும் அவர்கள் ஒரு வினோதமான நடவடிக்கையை மேற்கொண்டனர் - அவர்கள் மரங்களைச் சுற்றி ஒரு சாலையை உருவாக்கியுள்ளனர்.
ஆயினும், மரங்கள் சாலையின் நடுவில் இருப்பதால் ஏற்கெனவே பல விபத்துகள் நடைபெறுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்த உறுதியான முயற்சியையும் எடுப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் இவ்விவகாரம் ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது. இனியாவது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா எனப் பார்ப்போம்.