முழு சூரிய கிரகணம் ஆகஸ்ட் 2, 2025 ஆம் ஆண்டா... உண்மையில் எப்போது கிரகணம்?
சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது நிகழும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும். அப்போது சந்திரன் சூரியனின் ஒளியை பூமி மீது படவிடாமல் தடுத்து, சூரியனை மறைக்கிறது. அதுதான் சூரிய கிரகணமாகும்.. இந்த சூரிய கிரகணம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான நேரம் இருளை பூமிக்கு தர போவதாக ஆராய்ச்சியாளார்கள் தெரிவிக்கின்றனர்.. இந்நிலையில் அது வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி 2027ஆம் ஆண்டு அன்றுதான் நிகழ போகிறது என்று தேதியையும் அறிவித்திருந்தனர். ஆனால் இந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்படுவது குறித்து பல்வேறு கூற்றுக்கள் ஆன்லைனில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த வான நிகழ்வு எந்த ஆண்டில் நிகழும் என்பது பற்றி அனைவரிடமும் குழப்பம் நிலவி வருகிறது. அது 2025ஆம் ஆண்டா? அல்லது 2027ஆம் ஆண்டா ? உண்மையில் எந்த தேதியில் இந்த முழு சூரிய கிரகணம் நிகழும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
இந்த முழு சூரிய கிரகணமும் கிட்டத்தட்ட 6 நிமிடங்கள் வரை வானத்தையும் பூமியின் சில பகுதிகளையும் இருளாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. அதன் பிறகு இது போன்ற கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் நிகழுமாம்.. இந்த நிகழ்வு பார்வையாளர்களிடையே பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 2, 2025 அன்று முழு சூரிய கிரகணம் ஏற்படும் என்று சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, 2027 ஆம் ஆண்டு அதே தேதி முழு சூரிய கிரகண நாளாகக் கருதப்படுவதாகக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், முழு கிரகணம் ஆகஸ்ட் 2, 2027 அன்று நிகழும் என்று நாசா தெளிவுபடுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்வு, "நூற்றாண்டின் கிரகணம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகணத்தின் நீட்டிக்கப்பட்ட காலம் சூரியன், சந்திரன் மற்றும் பூமியை உள்ளடக்கிய ஒரு அரிய வானியல் சீரமைப்பு காரணமாகும். அதன் நீடிக்கப்பட்ட காலத்திற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன..
1. முதலாவதாக, பூமி சூரியனிலிருந்து மிக தொலைவில் இருக்கும், இது அஃபெலியன் என்று அழைக்கப்படுகிறது, இதனால் சூரியன் பூமியிலிருந்து சிறியதாகத் தோன்றும்.
2. இரண்டாவதாக, சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும், இதனால் அது பெரியதாகத் தோன்றும்.
3. இறுதியாக, சந்திரனின் நிழல் பூமத்திய ரேகையில் விழுந்து மெதுவாக விரிவடைந்து, இருளின் காலத்தை நீடிக்கும்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான அடுத்த கிரகணம் செப்டம்பர் 21, 2025 அன்று நிகழும் என்று நாசா தெரிவித்துள்ளது. அது பகுதி சூரிய கிரகணமாக இருக்கும் என்றும் இதை ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் காணலாம் என்றும் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 17, 2026 அன்று ஒரு வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. முழு வளைய சூரிய கிரகணம் அண்டார்டிகாவிலிருந்து தெரியும். அதே நேரத்தில் அண்டார்டிகா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் பகுதி கிரகணமாகத் தெரியும் என நாசா கணித்துள்ளது.
அத்துடன் ஆகஸ்ட் 12, 2026 அன்று முழு சூரிய கிரகணம் நிகழும் என்றும், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், ரஷ்யா மற்றும் போர்ச்சுகலின் ஒரு சிறிய பகுதியிலிருந்து தெரியும் என்றும் நாசா அறிவித்துள்ளது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் பெரிய பகுதிகளிலும், அட்லாண்டிக், ஆர்க்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களிலும் ஒரு பகுதி கிரகணம் தெரியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு ஆகஸ்ட் 2, 2027 அன்று நிகழும் முழு சூரிய கிரகணம், பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசம், அல்ஜீரியா, எகிப்து, மொராக்கோ, சவுதி அரேபியா, ஸ்பெயின், சூடான், துனிசியா, ஜிப்ரால்டர், ஏமன், லிபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா உள்ளிட்ட பல நாடுகளில் தெரியும். இந்த நிகழ்வின் போது பல நாடுகள் பகுதி கிரகணத்தைக் காணும். அப்போது உலகின் சில பகுதிகளில் முழுமையாக 6 நிமிடங்களுக்கு இருளை ஏற்படுத்தும் என்று நாசா தெரிவித்துள்ளது..
வரலாற்று ரீதியாக, மிக நீண்ட முழு சூரிய கிரகணம் 7 நிமிடங்கள் 28 வினாடிகள் நீடித்தது என சொல்லப்படுகிறது. இது கிமு 743 இல் நிகழ்ந்தது.