100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிதான சூரிய கிரகணம்.. தேதி, நேரம் குறித்த தகவல்கள் இதோ..!
சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது நிகழும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும். அப்போது சந்திரன் சூரியனின் ஒளியை பூமி மீது படவிடாமல் தடுத்து, சூரியனை மறைக்கிறது. அதுதான் சூரிய கிரகணமாகும்.. இந்த சூரிய கிரகணம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான நேரம் இருளை பூமிக்கு தர போவதாக ஆராய்ச்சியாளார்கள் தெரிவிக்கின்றனர்..
ஆம் வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி 2027ஆம் ஆண்டு அன்று ஒரு அரிய சூரிய கிரகணம் நிகழயுள்ளது.. இந்த சூரிய கிரகணம் அரிய நிகழ்வுதான்.. காரணம் இந்த முழு சூரிய கிரகணமும் கிட்டத்தட்ட ஆறு நிமிடங்கள் வரை வானத்தையும் பூமியின் சில பகுதிகளையும் இருளாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. அதன் பிறகு இது போன்ற கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் நிகழுமாம்.. இந்த நிகழ்வு பார்வையாளர்களிடையே பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த அரிதான சூரிய கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?
இந்த அரிதான சூரிய கிரகணம், பல கண்டங்களில் தெரியும் எனவும் அதில் அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கி ஜிப்ரால்டர் ஜலசந்தி, தெற்கு ஸ்பெயின், வடக்கு மொராக்கோ, வடக்கு அல்ஜீரியா, வடக்கு துனிசியா, வடகிழக்கு லிபியா, எகிப்து, சூடான், தென்மேற்கு சவுதி அரேபியா, ஏமன், சோமாலியா மற்றும் அரேபிய தீபகற்பத்திற்குள் உள்ள பிற நாடுகள் வழியாக பயணிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், அது முன்னேறும்போது, இந்தியப் பெருங்கடலில் அது மங்கலாகத் தெரிய தொடங்கும். மேலும் இது போன்ற கிரகணம் 2114ஆம் ஆண்டு வரை மீண்டும் நிகழாது எனவும் கணிக்கப்பட்டுள்ளது..
வராலாற்றில் இந்த முழு சூரிய கிரகணம் எப்போது தோன்றியது?
வரலாற்று ரீதியாக, மிக நீண்ட முழு சூரிய கிரகணம் 7 நிமிடங்கள் 28 வினாடிகள் நீடித்தது என சொல்லப்படுகிறது. இது கிமு 743 இல் நிகழ்ந்தது. 'பெரிய வட ஆப்பிரிக்க கிரகணம்' என்று அழைக்கப்படும் வரவிருக்கும் இந்த சூரிய கிரகணம், பல ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து தெரியும், இது கண்டத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைகிறது. பெரும்பாலான சூரிய கிரகணங்கள் குறுகியவை, 3 நிமிடங்களுக்கும் குறைவாகதான் நீடிக்கும், ஆனால் இது உலகின் சில பகுதிகளில் 6 நிமிடங்களுக்கு இருளை ஏற்படுத்தும் என்று வானியல் மையம் தெரிவித்துள்ளது..
அரிய சூரிய கிரகணத்தின் தேதி மற்றும் நேரம்
1. ஆகஸ்ட் 2ஆம் தேதி 2027ஆம் ஆண்டு திங்கட்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை முழு சூரிய கிரகணம் நிகழும்.
2. தெற்கு ஸ்பெயினில், உள்ளூர் நேரப்படி (CEST) மதியம் 1:30 முதல் 2:00 வரை முழுமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. லிபியா மற்றும் எகிப்து போன்ற வட ஆபிரிக்காவில், கிரகணம் உள்ளூர் நேரப்படி (EET) மதியம் 2:00 முதல் 2:30 வரை உச்சத்தில் இருக்கும்.
4. சவுதி அரேபியாவில், கிரகணம் சிறிது நேரம் கழித்து, உள்ளூர் நேரப்படி (AST) சுமார் 3:00 மணிக்கு முழுமையடையும்.
5. இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணம் இருக்காது. பகுதி சூரிய கிரகணமாக இந்தியாவில் இருக்கும்.
2027 சூரிய கிரகணம் ஏன் கிட்டத்தட்ட ஆறு நிமிடங்கள் நீடிக்கும்?
இந்த கிரகணத்தின் நீட்டிக்கப்பட்ட காலம் சூரியன், சந்திரன் மற்றும் பூமியை உள்ளடக்கிய ஒரு அரிய வானியல் சீரமைப்பு காரணமாகும். அதன் நீடிக்கப்பட்ட காலத்திறகு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளான..
1. முதலாவதாக, பூமி சூரியனிலிருந்து மிக தொலைவில் இருக்கும், இது அஃபெலியன் என்று அழைக்கப்படுகிறது, இதனால் சூரியன் பூமியிலிருந்து சிறியதாகத் தோன்றும்.
2. இரண்டாவதாக, சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும், இதனால் அது பெரியதாகத் தோன்றும்.
3. இறுதியாக, சந்திரனின் நிழல் பூமத்திய ரேகையில் விழுந்து மெதுவாக விரிவடைந்து, இருளின் காலத்தை நீடிக்கும்.
ஆக ஆகஸ்ட் 2, 2027 அன்று உலகம் ஒரு கணம் இருண்டுவிடும், அது முழு சூரிய கிரகணத்தின் மொத்த அழகையும் வெளிப்படுத்தும். இது நூற்றாண்டின் மிக முக்கியமான வான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. அந்த நாளுக்காக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்..