“தேர்தலில் வென்றால் வக்ஃப் சட்டத்திருத்தம் குப்பைத்தொட்டியில் வீசப்படும்” – தேஜஸ்வி வாக்குறுதி
பிகாரின் சீமாஞ்சல் பகுதியில் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாரின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து, வக்ஃப் மசோதாவை குப்பைத்தொட்டியில் வீசுவோம் என கூறியுள்ளார். இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில், பாஜக பலமுறை வெற்றி பெற்றுள்ளது.
பிகாரில் சீமாஞ்சல் பகுதி என்பது இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இப்பகுதியில் இருக்கும் 4 மாவட்டங்களில் 24 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. குறிப்பாக, பூர்னியா மாவட்டத்தில் ஏழு தொகுதிகளும், அராரியாவில் ஆறு தொகுதிகளும், கிஷன்கஞ்சில் நான்கு மற்றும் கதிஹாரில் ஏழு தொகுதிகள் இருக்கின்றன. கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில், பாஜக மூன்று முறை முன்னிலை வகித்துள்ளது. 2020ல் எட்டு இடங்களுடனும், 2010 இல் 13 இடங்களுடனும், 2005ல் 9 இடங்களுடனும் சீமாஞ்சல் பிராந்தியத்தில் முன்னிலை வகிக்கிறது. அதோடு இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் ஆர்ஜேடிக்கு செல்வாக்கு நிறைந்த பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில்தான் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவரும், மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வியாதவ் அப்பகுதியில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
கதிஹார் மற்றும் கிஷண் கஞ்ச் பகுதிகளில் பேசிய தேஜஸ்வி யாதவ், மதவாத சக்திகளுடன் தாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை; ஆனால் நிதிஷ் குமார் அவர்களுடன் உறவாடி வருவதாகவும் குறிப்பிட்டார். “மாநிலத்திலும் நாட்டிலும் வகுப்புவாத வெறுப்பைப் பரப்பும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் மடியில் நிதிஷ் குமார் அமர்ந்திருக்கிறார். இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் என அனைவரும் நாட்டுக்காக தியாகம் செய்துள்ளனர். அரசியலமைப்பு அனைவருக்கும் சம உரிமைகளை வழங்குகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வக்ஃப் மசோதாவை குப்பைத் தொட்டியில் வீசுவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
சீமாஞ்சல் பிராந்தியத்துக்கு உட்பட்ட பிரான்பூர், கோச்சா தமன், ஜோகிஹாட் மற்றும் நர்பத்கஞ்ச் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட தேஜஸ்வி யாதவ், சீமாஞ்சல் பகுதி பிகாரின் ஏழ்மையான பகுதி என்றும் இதற்காக தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தேர்தலில் பதிலடி கொடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சீமாஞ்சல் பிராந்தியத்தின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நேபாளத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் சீமாஞ்சல் பகுதி வளர்ச்சிக்காகவே தனி வாரியம் அமைக்கப்படும் என்றும் தேஜஸ்வி குறிப்பிட்டார்.
அதோடு, கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் நிதிஷ் குமார் அரசாங்கத்தால் பிகார் மக்கள் சோர்வடைந்துவிட்டதாக தேஜஸ்வி தெரிவித்திருக்கிறார். "முதல்வர் சுயநினைவில் இல்லை என்பது பொது மேடைகளில் அவர் செய்யும் செயல்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஊழல் உச்சத்தில் உள்ளது, சட்டம் ஒழுங்கு இயந்திரம் சரிந்துவிட்டது" என்று அவர் மேலும் கூறினார்.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்திற்கு நவம்பா் 6, 11 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இரு கட்டங்களாக நடக்கும் தேர்தல்களுக்கும் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் கட்சிகள் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி, மகா ஜனநாயகக் கூட்டணி, ஜன் சுராஜ் என கிட்டத்தட்ட நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

