4 ஆண்டுகள் வேலை.. வெறும் ரூ.422தான் ஊதிய உயர்வா? - TCS ஊழியரின் பதிவு வைரல்!
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக TCS-இல் பணிபுரிந்த அந்த ஊழியர், (Reddit) சமூக ஊடக தளத்தில், தன்னுடைய அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஐ.டி. பணியாளர்கள் பணிபுரியும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS). அந்த நிறுவனத்தின் ஒரு ஊழியர், தன்னுடைய சம்பள உயர்வைப் பற்றிய அனுபவத்தை பகிர்ந்திருப்பது, தற்போது இணையத்தில் பெரும் விவாதமாகியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக TCS-இல் பணிபுரிந்த அந்த ஊழியர், (Reddit) சமூக ஊடக தளத்தில், தன்னுடைய அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “நான் 4 ஆண்டுகள் முழுவதும் உழைத்த பிறகு, எனக்கு கிடைத்த மாத சம்பள உயர்வு வெறும் ₹422 மட்டுமே! அதுவும் ஆறு மாதங்கள் தாமதமாக வழங்கப்பட்டது!” என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் பணியில் சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகளில் தான் இருந்த project environment மிகவும் நச்சுத்தன்மை (toxic) வாய்ந்ததாக இருந்தது. அங்கு மேலதிகாரிகள் அடிக்கடி கத்துவது, micromanagement செய்வது, அழுத்தம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறினார்.அந்த சூழ்நிலையிலும் தன்னை நிலைநிறுத்தி, நான்கு ஆண்டுகள் நிறுவனத்தில் இருந்தது தான் “தவறான முடிவு” என்று அவர் பதிவு செய்துள்ளார். மேலும், தனது அனுபவத்திலிருந்து மற்ற ஐ.டி. ஊழியர்களுக்கு ஒரு அறிவுறுத்தலும் வழங்கியுள்ளார். “உங்களுடைய மதிப்பை புரிந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் வெளியேறத் தயங்காதீர்கள்,” என்று அவர் எழுதியுள்ளார்.
அந்தப் பதிவு சில மணி நேரங்களுக்குள் இணையத்தில் வைரலாகி, ஆயிரக்கணக்கான ஐ.டி. பணியாளர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். பலர் “இதுதான் நம்ம நிலை” என்று பகிர்ந்துக் கொண்டனர். இந்நிலையில், TCS நிறுவனம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது. “பெயர் குறிப்பிடாத ஒரு ஊழியர் கூறிய விவரங்கள் துல்லியமானவை அல்ல,” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளன, இதில் சுமார் 80% ஊழியர்களுக்கு சம்பள திருத்தம் செய்யப்பட்டதாகவும், சராசரி உயர்வு 4.5% முதல் 7% வரை எனவும், அதிக செயல்திறன் கொண்டவர்களுக்கு இரட்டை இலக்க உயர்வும் வழங்கப்பட்டதாகவும் நிறுவனம் விளக்கியுள்ளது.
ஆனால், இந்த ஒரு பதிவே, இந்திய ஐ.டி. துறையில் உள்ள சம்பள உயர்வு முறை, ஊழியர் மதிப்பு, மற்றும் மனஅழுத்தம் குறித்து பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.ஒரு ஊழியரின் அனுபவம், ஆயிரக்கணக்கானவர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை .

