ஒரு பக்கம் கசப்பு.. மறுபக்கம் இனிப்பு: ஆட்குறைப்புக்கு பின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்த TCS!
இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), சமீபத்தில் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது இளைஞர்களை அதிர்ச்சியடைச் செய்தது. ஆனால் இந்த அதிர்ச்சி செய்தி மறைவதற்குள், அங்கு பணிபுரிவோருக்கு ஓர் உற்சாக செய்தியை அடுத்த சில நாட்களுக்குள்ளேயே அறிவித்திருப்பது தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது. ஆம், டிசிஎஸ் நிறுவனம் 80 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
டிசிஎஸ் ஊழியர்களில் சுமார் 80 சதவீதம் பேர், அதாவது 5 பேரில் 4 பேர், செப்டம்பர் 1 முதல் சம்பள உயர்வுக்கு தகுதியுடையவர்கள் என்று நிறுவனம் தனது மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது. அந்த மின்னஞ்சலில், ‘C3A மற்றும் அதற்கு சமமான தரங்களில் உள்ள அனைத்து தகுதியுள்ள கூட்டாளிகளுக்கும் இழப்பீட்டு திருத்தத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது எங்கள் பணியாளர்களில் 80 சதவீதத்தை உள்ளடக்கியது. இது செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வரும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
C3A பிரிவில் சுமார் 11 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான அனுபவம் உள்ள ஊழியர்களுக்கு இந்த உயர்வு பொருந்தும் என Mint செய்தி ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில், C3B, C4 அல்லது C5 உள்ளிட்ட உயர் பிரிவுகளில் பணிபுரிபவர்கள் இன்னும் இந்த சுற்று உயர்வுகளில் சேர்க்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. எனினும், இந்த ஊதிய உயர்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை CTCகள் இருப்பதாக NDTV அறிக்கை தெரிவிக்கிறது. அறிக்கையின்படி, TCS சம்பள உயர்வு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பயனளிக்கும் எனத் தெரிகிறது.
அதேநேரத்தில், சம்பள உயர்வு பெறும் ஊழியர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், டிசிஎஸ் ஊழியர்களுக்கு இந்த சுழற்சியில் 2 முதல் 4 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த உயர்வு 7-9 சதவீதமாக இருந்தது. மேலும், முக்கிய ஐடி நிறுவனங்களில் சம்பள உயர்வு பெறும் முதல் ஊழியர்கள் டிசிஎஸ் ஊழியர்களாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இன்போசிஸ், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை சம்பள உயர்வு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் எச்.சி.எல். அக்டோபர் மாதத்தில் அவற்றை வெளியிடும் என்று குறிப்பிட்டுள்ளது.