ஒரு நாளைக்கு இவ்வளவு உப்புதான் எடுத்துக்கணுமாம்.. இல்லைனா ஆபத்து.. எச்சரிக்கும் இதயவியல் மருத்துவர்!
உப்பு என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும்.. உப்பு இல்லாத பண்டம் குப்பை என்பது போல தினமும் நாம் உண்ணும் உணவில் உப்பை நம்மால் தவிர்க்கவே முடியாது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்துதான். உப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்வது உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய்கள், சிறுநீரக கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் ஒருவர் தினசரி 5 கிராம் உப்பை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆனால் இந்தியாவில் இது 9.2 கிராமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதனால் குறைந்த சோடியம் உப்பை பயன்படுத்துவது நல்லது என கூறியுள்ளது.. அப்போ உப்பை தினமும் எப்படி பயன்படுத்த வேண்டும்? குழந்தைகளுக்கு எவ்வளவு கிராம் கொடுக்கலாம்? குறைந்த சோடியம் உப்பை பயன்படுத்துவது நல்லதா? அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் புதிய தலைமுறை இணையதளத்திற்கு விளக்கமளிக்கிறார் சென்னை காவேரி மருத்துவமனையின் இதயவியல் மருத்துவர் சுந்தர்.
உப்பை அதிகமாக எடுத்து கொள்வதினால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் சுந்தர், “ கண்டிப்பாக உணவில் உப்பை அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது. உப்பு அதிகமாக அதிகமாக உடலில் வியாதிகளும் அதிகமாகும். குறிப்பாக இரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய்கள் உள்ளிட அனைத்து விதமான உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் பிரச்சனைகள் வந்து விடும்” என்றார்..
உப்பை குறைவாக எடுத்துக் கொள்வதினால் உப்பில் உள்ள சத்துகள் சரியாக கிடைக்காமல் பிரச்சனைகள் வராத என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,” உப்பில் சோடியம்தான் இருக்கிறது. ஹிமாலயன் உப்புகளில் மெக்னீசியம் , காப்பர் உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. ஆனால் அந்த சத்திற்காக உப்பைதான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. இந்த அனைத்து சத்துகளும் மற்ற ஆரோக்கியமான உணவுகளில் இருந்து கிடைக்கும். அதனால் ஆரோக்கியமான உணவுகளான பழங்கள், பருப்பு வகைகள், மற்றும் காய்கறிகளை அதிகமாக உணவில் எடுத்துக் கொண்டாலே போதுமானது” என்றார்.
ICMR அறிக்கையில் உப்பை 5 கிராம்தான் சாப்பிட வேண்டும்னு சொல்லிருக்காங்க, அப்போ குழந்தைகளுக்கும் அதே 5 கிராம் கொடுக்கலாமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர், 1 வயது வரை குழந்தைகளுக்கு உப்பை கொடுக்காமல் இருப்பது நல்லது. 1 முதல் 3 வயதிலான குழந்தைகளுக்கு 2 கிராம் உப்பு போதுமானது. 4 முதல் 8 வயது குழந்தைகளுக்கு தினமும் 3 கிராம் உப்பு அல்லது 1.2 கிராம் சோடியம் உள்ள உப்பை கொடுக்கலாம். 9 முதல் 18 வயது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 5 கிராம் உப்பு சாப்பிடலாம் அல்லது குறைந்த சோடியம் உள்ள உப்பை வாங்கி பயன்படுத்தலாம். ஆனால் சோடியம் குறைந்த உப்பு விலை அதிகமாக இருப்பதினால் மக்கள் அதை வாங்கி பயன்படுத்த தயங்குகிறார்கள்” என்கிறார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், ”இதய ஆரோக்கியத்தை பராமரிக்க தினமும் 3 கிராமுக்கு குறைவான சோடியத்தை எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால் உயர் ரத்த அழுத்தம் அல்லது சிறுநீரக நோய் இருப்பவர்கள் இந்த அளவைவிட குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது. இதில் வயதானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 கிராமுக்கும் குறைவான உப்பையே பயன்படுத்த வேண்டும்” என்கிறார்.
குறைந்த சோடியம் உள்ள உப்பை பயன்டுத்துவதினால் எந்த பிரச்சனைகளும் வராதா? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், குறைந்த சோடியம் உள்ள உப்பில் பொட்டாசியம் குளோரைடு சேர்க்கப்படுகிறது. அதன் மூலமாக உப்பின் சுவை குறையும். ஆனால் அதையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நல்லது கிடையாது. அதுலயும் ஒரு அளவு இருக்கு.. காரணம் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கிட்னி பிரச்சனை உள்ளவர்களுக்கு இது போல குறைந்த சோடியம் உள்ள உப்புகள் ஒத்துவராது. அதனால் மருத்துவரின் ஆலோசனையை கேட்ட பிறகே இந்த மாதிரியான (low sodium salt) குறைந்த சோடியம் உள்ள உப்பை சாப்பிட வேண்டும் ” என்கிறார் மருத்துவர்.
உப்பு இதய ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்குமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர், ”கண்டிபாக நேரடியாக பாதிப்புகள் வராது. காரணம் நம் உடலில் உள்ள கழிவுகளை முக்கியமாக அதிகபடியான உப்புகளை கிட்னி வெளியேற்றிக் கொண்டேதான் இருக்கும். ஆனால் என் கிட்னி நன்றாக வேலை செய்கிறது. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று தொடர்ந்து அதிகமான உப்பை எடுத்துக் கொண்டால் அது பாதிப்பை ஏற்படுத்தும்.
உதாரணமாக எனக்கு ரத்த அழுத்தம் இருந்தால் உப்பை அளவாகதான் சாப்பிட வேண்டும். அப்படி கட்டுபாடு இல்லாமல் இருந்தால் இதயம் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். அதனால் மூச்சு வாங்கும். இரத்த அழுத்தம் அதிகமாகி இதயம் பாதிப்புக்குள்ளாகும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாய் , அப்பளம் ஆகிவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லதாக இருக்கும். காரணம் அதில் உப்பு அதிகமாக சேர்க்கபப்டும். அதனால் அதை சாப்பிடட்டால் இதயத்தில் பாதிப்பு உண்டாகும் ” என்றார்.