தேவைக்கு அதிகமாக 2 மடங்கு உப்பு... ICMR வெளியிட்ட எச்சரிக்கை!
இந்தியர்கள் உணவில் தேவைக்கு அதிகமாக 2 மடங்கு உப்பைச் சேர்த்துக் கொள்வதாக மத்திய அரசு அமைப்பு எச்சரித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறையின் ஒரு அங்கமான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்வது உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய்கள், சிறுநீரக கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளது. ஒருவர் தினசரி 5 கிராம் உப்பை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆனால் இந்தியாவில் இது 9.2 கிராமாக உள்ளதாகவும் அக்கவுன்சில் தெரிவித்துள்ளது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் தேசிய தொற்றுநோயியல் மையமும் இணைந்து தேசிய அளவிலான ஆய்வை மேற்கொண்டுள்ளன. குறைந்த சோடியம் கொண்ட உப்புகள் விற்கப்படும் கடைகள் குறைவாகவே இருப்பது சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என தேசிய தொற்றுநோயியல் மையத்தின் மருத்துவர் ஷரண் முரளி தெரிவித்துள்ளார். எனினும் சாதாரண சோடியம் உப்பை விட குறைந்த சோடியம் உப்பின் விலை இரு மடங்கு அதிகம் இருப்பதும் அவற்றிற்கு வரவேற்பு இல்லாதற்கு காரணம் என அவர் கூறினார். சோடியம் குளோரைடை சமையல் உப்பாக பயன்படுத்துவதற்கு பதில் பொட்டாசியம் அல்லது மெக்னீசயம் சால்ட்டை பயன்படுத்தினால் பாதிப்புகள் குறையும் எனவும் அவர் தெரிவித்தார்