குடியிருப்பு பகுதியில் பிடிக்கப்பட்ட 122 பாம்புகள்.. எங்கே தெரியுமா?
மும்பையில் பருவமழையின் காரணமாக ஜூன் 1 முதல் ஜூலை 25 வரை பல்வேறு குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் இருந்து 122 பாம்புகள் மீட்கப்பட்டதால், அங்கு மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 25 வரை 266 பாம்புகள் மீட்கப்பட்டதாக தரவுகள் காட்டுகிறது. மீட்கப்பட்ட மொத்த பாம்புகளில், 86 இந்திய எலி பாம்புகள், இது இந்தியாவில் மிகவும் பொதுவான நச்சுத்தன்மையற்ற பாம்புகளாகும். அதே நேரத்தில் 49 பாம்புகள் நாகப்பாம்பு, இது மிகவும் விஷமான பாம்பாகும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கௌரவ வனவிலங்கு காவலர் மற்றும் (RAW) வனவிலங்கு நலனுக்கான ரெஸ்கின் சங்க நிறுவனர் பவன் சர்மா கூறுகையில், ”இந்த இரண்டு வகையான பாம்புகளும் பெரும்பாலும் எலிகள், சுண்டெலிகள், அணில்கள், முயல்கள் போன்றவைகளை உணவாக உண்ணுகின்றன. மேலும், பெரும்பாலான பாம்புகள் வடிகால்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளில் இருந்ததாகவும், குடியிருப்பு பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் மற்றும் வடிகால்கள் திறந்து இருந்ததால் இப்படி பாம்புகளும் மற்ற ஊர்வனங்களும் எளிதாக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து விடுகின்றன” எனவும் தெரிவித்தார்.
குறைந்து வரும் பாம்புகளின் எண்ணிக்கை
“மும்பையில், இந்த பாம்புகள் குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் வடிகால்கள் முதல் திறந்த இடங்கள் மற்றும் பொது தோட்டங்கள் வரை கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பரவி உள்ளன. உண்ணக்கூடிய கழிவுகள் வெளியேறுதல் மற்றும் கொறித்துண்ணிகளை கட்டுபடுத்த இயலாமை எலி பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் அதிகமாக் நகரத்திற்குள்ளே வர வழிவகுக்கிறது” என்று சர்மா கூறினார்.
”அதிகாரிகளால் மீட்கப்பட்ட வேறு சில இனங்களில் 26 இந்திய பாறை மலைப்பாம்புகள்(Rock pythons), 25 ரஸ்ஸலின் வைபர்கள் (Russell's Vipers), 21 சரிபார்க்கப்பட்ட கீல்பேக்குகள் (keelback) மற்றும் 16 நீண்ட மூக்கு சவுக்கடி பாம்புகள் ( Long-nosed whip snakes) ஆகியவை அடங்கும்” என்றார். இருப்பினும், ”இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட பாம்பு மீட்பு நடவடிக்கைகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ஓரளவு குறைவாக உள்ளது.
வனவிலங்கு நலனுக்கான ரெஸ்கின்க் சங்கத்தால் (RAW) பகிரப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஜூலை 25 வரை 153 பாம்புகள் மீட்கப்பட்டன, அதே நேரத்தில் 2023 ஆம் ஆண்டில், 123 பாம்புகள் மீட்கப்பட்டன, 2022 ஆம் ஆண்டில் இந்த காலகட்டத்தில் மொத்தம் 211 பாம்புகள் மீட்கப்பட்டன, 2021 இல் 189 மற்றும் 2020 ஆம் ஆண்டில் 208 பாம்புகள் மீட்கப்பட்டன. இருப்பினும், மும்பையில் பாம்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது” என்றும் சர்மா கூறினார்.
முட்டைகளுடன் மீட்கப்படும் பாம்புகள்
மேலும் பேசியவர், ”எங்கள் மீட்புக் குழுக்கள் பாம்புகள் உள்ள இடத்தை அடைவதற்கு முன்பு பல முறை பாம்புகள் தப்பித்துவிடுகின்றன. இந்த பாம்புகள் சமீபகாலமாக நகர்ப்புற வாழ்விடத்திற்குள் இருப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றன.. காரணம் மக்கள் பொதுவாக பாம்புகளுடன் இணைந்து வாழ தயாராக உள்ளனர், குறிப்பாக அவை இயற்கையில் நச்சுத்தன்மையற்றவை என்பதை அவர்கள் அறிந்தவுடன் எந்த பயமும் இன்றி பாம்புகளுடனே வாழ தொடங்கிவிட்டனர்..” என்றார் சர்மா.
பாம்புகள் மீட்கப்பட்ட பிறகு, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவை அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் கொண்டு போய் விடப்படுகின்றனர். பல சந்தர்ப்பங்களில், அதன் முட்டைகள் உடைந்து விடாமல் குஞ்சு பொரிப்புகள் இழக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மீட்கப்பட்ட முட்டைகளும் செயற்கையாக அடைகாக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதம், ஒரு பாறை மலைப்பாம்புடன் மீட்கப்பட்ட 22 முட்டைகள் செயற்கையாக வெற்றிகரமாக குஞ்சு பொரித்தன. அதைத் தொடர்ந்து குஞ்சு பொரிப்புகள் அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் விடப்பட்டன என்று அவர் தெரிவித்தார்..