இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் குறைந்ததால் விபரீத முடிவு!
இன்ஸ்டாகிராமில் Content Creator ஆக இருந்த இளம்பெண் ஒருவர், தனது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இறப்பிற்கான காரணமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்கத்தில் செல்வாக்கு மிகுந்த Content Creatorம், மிஷா அகர்வால் என்ற அழகு சாதன பிராண்டின் நிறுவனருமான மிஷா அகர்வால், கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். ஏப்ரல் 25 ஆம் தேதி அவரது பிறந்தாள் வரவிருந்த சூழலில், இப்படி ஒரு விபரீத முடிவை அவர் எடுத்திருப்பது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தநிலையில், மிஷா இறந்த ஆறு நாட்களுக்கு பிறகு, மிஷாவின் சமூக வலைதளப்பக்கத்தில் இறப்பிற்கான காரணத்தை கண்ணீர் நிறைந்த வார்த்தைகளால் பதிவிட்டுள்ளார் அவரது சகோதரி.
அதில், “ மிஷாவின் செல்போன் வால்பேப்பர் எல்லாவற்றையும் சொல்லிவிடும் அவளின் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று. 1 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற வேண்டும் என்பதே மிஷாவின் கனவு. அவர் இறப்பதற்கும் முன் 3.5 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
நாளுக்கு நாள் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டுவந்ததால் அவள் மனமுடைந்தாள்.
தன்னை பயனற்றவராக உணர ஆரம்பித்தாள். ஏப்ரல் மாதம் முழுவதும் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டாள். என்னை அடிக்கடி கட்டிப்பிடித்து அழுது, 'ஜிஜா, என்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டால் நான் என்ன செய்வேன்? என் வாழ்க்கையே முடிந்துவிடும். “ என்றாள். எவ்வளவோ அவளை சமாதானப்படுத்த முயன்றோம். இன்ஸ்டாகிராம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே..அதுதான் எல்லாமே என்று நினைக்காதே என்றெல்லாம் கூறினோம்.
அவளுடைய திறமைகள், எல்.எல்.பி பட்டம் மற்றும் பி.சி.எஸ்.ஜே-க்கான தயாரிப்பு ஆகியவற்றை நான் அவளுக்கு நினைவூட்டினேன். அவள் ஒரு நாள் நீதிபதியாகிவிடுவாள் என்றும், அவளுடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும் சொன்னேன்.
துரதிர்ஷ்டவசமாக, என் தங்கை என் பேச்சைக் கேட்கவில்லை, இன்ஸ்டாகிராம் மற்றும் பின்தொடர்பவர்களால் மிகவும் ஈர்க்கப்பட்ட அவள், இப்போது இந்த உலகத்தை விட்டுஅ சென்றுவிட்டால். துரதிர்ஷ்டவசமாக, மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தன் உயிரை மாய்த்துக் கொண்டாள், எங்கள் குடும்பத்தையே பேரழிவிற்கு உள்ளாக்கியிருக்கிறாள்." என்று மிகுந்த வேதனையோடு பதிவிட்டுள்ளார் .
இப்படி குடும்பம் எவ்வளவோ அவரை உறுதிப்படுத்த நினைத்த போதிலும், அதை புரிந்து கொள்ளாத மிஷா தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள நடிகை டாப்ஸி இந்த சம்பவம் மிகவும் மனவேதனை தருவதாக பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, குஜராத்தின் சூரத் நகரத்தில் உள்ள குடியானா கிராமத்தைச் சேர்ந்த பிரதீக் படேல் என்பவரும், ஜிம்மில் தான் எடுக்கும் விடியோக்களை தினமும் ரீல்ஸாக பதிவிட்டு வந்தார்.
இதுவரை, 300-க்கும் மேற்பட்ட ரீல்ஸை அவர் பதிவிட்டிருந்தாலும் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 7,923-ஆக மட்டுமே இருந்துள்ளது. ஆனால், இவரைவிட மற்றவர்களுக்கு பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து இவருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நீண்ட நாள்களாக மன அழுத்தத்தில் இருந்த அவர், ஏப். 1 அன்று விஷம் அருந்தி கிராமத்தின் கிரிக்கெட் மைதானத்தில் விழுந்தார்.