பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது.
குறிப்பாக, பாகிஸ்தான் உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, என அடுத்தடுத்து உத்தரவுகளை இந்தியா பிறப்பித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானும் இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கித், ஸ்கர்டு ஆகிய நகரங்களுகு செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் விதித்த தடையால் இந்திய விமானங்கள் நீண்டதூரம் சுற்றிச்சசெல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றுக்கு செலவாகும் கூடுதல் எரிபொருளால் ஏற்படும் இழப்பு மாதத்திற்கு 307 கோடி ரூபாயாக இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.