இவ்ளோ சிக்கலா!! பீகாரில் பூதாகரமாக வெடித்த வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி.. எச்சரிக்கை மணியா இது?
செய்தியாளர் : இர்ஃபாத்
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகள் தொடங்கி தேர்தல் ஆணையம் வரை அனைவரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
special intensive revision - சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்!
வழக்கமாக தேர்தல் ஆணையம் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களின் 1-ந் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு ஆண்டுக்கு 4 முறை சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும். ஆனால் இந்த முறை பீகார் தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் 24 ஆம் தேதி தேர்தல் ஆணையம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி special intensive revision எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு தான் இப்போது நாடு முழுவதும் கடும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
ஜூன் 24 ஆம் தேதி வெளியான அந்த அறிவிப்பில் 2003 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் தங்களது இந்திய குடியுரிமை மற்றும் இருப்பிடத்தை நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. அதாவது 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் கணக்கெடுப்பு கணினிமையாக்கப்பட்ட நிலையில் அதற்கு பிறகான கணக்கெடுப்புகளில் இடம்பெற்றவர்களை மீண்டும் உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் கோரியிருக்கிறது.
மொத்தம் 3 பிரிவுகள்
இதன்படி வாக்காளர்கள் மொத்தம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
1. 1987 ஜூலை 1க்கு முன்பு பிறந்தவர்கள் அல்லது 38 வயதுக்கு மேற்பட்டோர் தங்களது குடியுரிமைக்கான சான்று மற்றும் இருப்பிடச் சான்றிதழை வழங்கி தங்களுடைய வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
2. 1987 ஜூலை 1 முதல் 2004 டிசம்பர் 2 க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் அல்லது 20 முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்களுடைய குடியுரிமைக்கான சான்று மற்றும் இருப்பிடச் சான்றிதழுடன் தங்களுடைய தாய் அல்லது தந்தை இருவரில் யாராவது ஒருவரது அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
3. 2004 க்கு பிறகு பிறந்தவர்கள் அல்லது 18 முதல் 20 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய குடியுரிமை மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களுடன் பெற்றோர்கள் இருவரின் அடையாள சான்றிதழையும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வரைமுறைகள் தான் இப்போதைய சர்ச்சைகளுக்கு காரணம். ஏனெனில் இந்த சான்றிதழ்களை வழங்க தவறினால் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அவர்களுக்கான வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படும் என்பதுதான் இதில் மிக முக்கிய அம்சம்.
இதற்காக தேர்தல் ஆணையம் தங்களுடைய அடையாள அட்டையாக காண்பிக்க மொத்தம் 11 ஆவணங்களை பட்டியலிட்டுள்ளது. அதில் பாஸ்போர்ட், சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை போன்றவை அடங்கும். ஆனால் மிக முக்கியமாக ஆதார், ஏற்கனவே உள்ள வாக்காளர் அடையாள அட்டை போன்றவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரே ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதா?
தற்போதைய இந்தியாவில் பெரும்பான்மையான மக்களின் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் இருக்கும் நிலையில் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பீகார் போன்ற மாநிலங்களில் பெரும்பான்மையான கிராமங்களில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பல ஆவணங்களை அங்குள்ள மக்கள் எடுத்திருக்க கூட மாட்டார்கள். சமீபத்தில் வெளியான தரவுகளில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களில் கிட்டத்தட்ட 6 ஆவணங்கள் பீகாரில் பயன்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ளவற்றில் பிறப்பு சான்றிதழ் 2.8%, பாஸ்போர்ட் 2.4, அரசு வேலைக்கான அடையாள அட்டை 5%க்கு குறைவாகவும் சாதி சான்றிதழ் 16% பேரிடம் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் மீதமுள்ள மக்கள் எப்படி தங்களது குடியுரிமையை நிறைவேற்றி வாக்குரிமையை பெற முடியும் என்பது தான் இப்போது முக்கியமான கேள்வி.
தேர்தல் ஆணையம், பாஜக என்ன சொல்கிறது?
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள விளக்கத்தில் மொத்தமுள்ள 7.8 கோடி போரில் 63% அதாவது 4.96 கோடி பேர் 2003 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பட்டியலில் இருப்பதாகவும் மீதமுள்ள 3 கோடி அளவிலான மக்களே இதை நிரூபிக்க வேண்டும் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறது.
முன்னதாக 2024 மக்களவைத் தேர்தலில் நேபாளம், வங்கதேச எல்லை பகுதிகளில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பீகாரின் வடகிழக்கு பகுதியான சீமாஞ்சலில், அங்குள்ள நான்கு இடங்களில் மூன்றில் பா.ஜ.க கூட்டணி தோல்வியை சந்தித்தது. அதனால், ஆளும் பாஜக அரசு நாட்டுக்குள் பிறநாட்டினரின் ஊடுருவல் அதிகரித்ததாகவும், அவர்களாலேயே மூன்று இடங்களை இழந்ததாகக் கூறியது.
இதையே தான் தற்போது இந்த திருத்தங்களுக்கு காரணமாக கூறியிருக்கிறது. சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டினரின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறுவது, 18 வயது நிரம்பி இளைஞர்கள் வாக்குரிமை பெறுவது, அடிக்கடி இடம்பெயர்வு, மற்றும் இறப்புகள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால், வாக்காளர் பட்டியலை திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காட்டமாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்!
காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்திற்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து பெரும்பாலான மக்கள் புலம்பெயர்ந்து பல்வேறு மாநிலங்களில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் ஒரு மாதத்திற்குள் தங்களுடைய குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என கூறுவது ஏற்புடையது இல்லை.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பலருடைய வாக்குரிமையை பறிக்க வழிவகுக்கும் என்றும் இறுதி முடிவை தேர்தல் அலுவலரே எடுத்துக்கொள்ளலாம் என அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்த நபர் தன்னுடைய விருப்பு வெறுப்பு சார்ந்து முடிவெடுக்கவும் ஏதேனும் கட்சிகளுக்கு ஆதரவாக குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக நடந்துகொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமன்றி இந்த தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு மறைமுகமாக உதவி செய்யும் என்றும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
தேர்தல் தலைமை அலுவலர் வெளியிட்ட விளம்பரம்!
இதற்கிடையே பீகாரின் தேர்தல் தலைமை அலுவலர் வெளியிட்ட ஒரு விளம்பரத்தில் பொதுமக்கள் தற்போது இந்த திருத்தத்திற்க்கான படிவத்தை மட்டுமே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் ஆவணங்களை பிறகு சமர்ப்பிக்கலாம் என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போன்றோர் கூறிய நிலையில் அதற்கும் தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்துள்ளது.
அதாவது ஜூன் 24 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பிலேயே ஆவணங்களை பிறகு வழங்கலாம் என்கிற நிபந்தனை இருந்ததாகவும் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர நடவடிக்கையில் இருந்து எந்த பின்வாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது