வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு ஏன் கடும் எதிர்ப்பு? பீகாரில் என்ன நடக்கிறது | A to Z தகவல்
ஒரேயொரு ஓட்டுகூட ஒட்டுமொத்த அரசியலையும் மாற்றும் சக்தி படைத்தது. அதற்கு, உலகில் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. அதனால்தான், வாக்காளர்கள் எப்போதும் வலிமைமிக்கவர்களாக உள்ளனர். அந்த வகையில்தான் தகுதிபெற்ற எல்லோரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில நாடுகளில் வாக்களிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. நிலைமை இப்படியிருக்க, பீகார் மாநிலத்திலோ தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம், அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புதான் தற்போது நாடு முழுவதும் கடும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
விவாதப்பொருளாக மாறிய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு
ஜூன் 24ஆம் தேதி வெளியான அந்த அறிவிப்பில். 2003ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் தங்களது இந்திய குடியுரிமை மற்றும் இருப்பிடத்தை நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. அதாவது, 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் கணக்கெடுப்பு கணினிமையாக்கப்பட்ட நிலையில், அதற்குப் பிறகான கணக்கெடுப்புகளில் இடம்பெற்றவர்களை மீண்டும் உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் கோரியிருக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் தங்களுடைய அடையாள அட்டையாக காண்பிக்க மொத்தம் 11 ஆவணங்களை பட்டியலிட்டுள்ளது. அதில் பாஸ்போர்ட், சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை போன்றவை அடங்கும். ஆனால் மிக முக்கியமாக ஆதார், ஏற்கெனவே உள்ள வாக்காளர் அடையாள அட்டை போன்றவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் பெரிய பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
ஆதாரே ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதா?
தற்போதைய இந்தியாவில் பெரும்பான்மையான மக்களின் முக்கிய அடையாள அட்டையாக ஆதாரே உள்ளது. அனைத்துக்கும் அதுவே சான்றாக அளிக்கப்பட்டு வருகிறது. ஆகையால், எல்லோரும் ஆதார் அட்டையைக் கட்டாயம் எடுத்து விடுகின்றனர். அப்படி இருக்கையில், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், எண்ணற்ற வாக்காளர்கள் வாக்கு செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அங்குள்ள முஸ்லிம்கள், பட்டியலினத்தவர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற ஓரங்கட்டப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இரண்டு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் கடுமையான ஆவணங்கள் காரணமாக, அதாவது அவர்கள், பெரும்பாலும் செல்லுபடியாகும் அடையாளச் சான்றுகள் அல்லது வசிப்பிடச் சான்றுகளைக் கொண்டிருக்காததால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து முஸ்லிம்கள் நீக்கப்படும் நிலை
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி காரணமாக, அவர்கள் வாக்குரிமையை இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். வரலாற்றுரீதியாக, இந்தச் சமூகங்கள் எதிர்க்கட்சியின் முக்கிய தேர்தல் தளமாக இருந்துவரும் நிலையில், பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்களை கணிசமாக நீக்குவது அவர்களின் வாக்குப் பங்கை வெகுவாகப் பலவீனப்படுத்தக்கூடும். அதிலும் கிஷன்கஞ்ச், அராரியா, கதிஹார் மற்றும் பூர்னியா ஆகியவற்றை உள்ளடக்கிய சீமாஞ்சல் பகுதியில் 47 சதவீதத்திற்கு அதிகமான முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களது பெயர்கள் நீக்கப்பட்டால், அது ஆளும் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்த பகுதிகளைத் தவிர, இதன் தாக்கங்கள் சீமாஞ்சலுக்கு அப்பாலும் நீண்டுள்ளது. கிழக்கு பீகார் மற்றும் அருகிலுள்ள பூர்வாஞ்சலில், தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்காளர் நீக்கம் மூலம் மறுசீரமைப்பு செய்வது i-n-d-i-a கூட்டணியின் வாய்ப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
போராட்டத்தால் ஸ்தம்பித்த பீகார்!
இதையடுத்தே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சிபிஐயின் டி.ராஜா, சிபிஎம்மின் தீபங்கர் பட்டாச்சார்யா ஆகியோர் இணைந்து சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்காகத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் பேரணி நடத்தினர். ஆர்ஜேடி மற்றும் மகா கூட்டணி ஆதரவாளர்கள் பீகார் முழுவதும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர். பாட்னாவின் பல பகுதிகளிலும், அராரியா, பூர்னியா, கதிஹார் மற்றும் முசாபர்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஆர்ஜேடி தொழிலாளர்கள் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தில் ஈடுபட்டனர். ஆர்வால், ஜெகனாபாத் மற்றும் தர்பங்காவிலும் பீகார் பந்திற்கு ஆதரவாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், சிபிஐ (எம்எல்) லிபரேஷன் மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் டயர்களை எரித்து சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பேரணியில் பேசிய தேஜஸ்வி, “பீகார் ஜனநாயகத்தின் தாய். அவர்கள் இங்கே ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள். பீகார் மக்கள் இதை நடக்க விடமாட்டார்கள்” என எச்சரித்தார்.
”தேர்தல்களில் மோசடி..” - ராகுல் சாடல்
ராகுல் காந்தியோ, மகாராஷ்டிராவில் தேர்தல் ஆணையம் செய்ததைப் போன்ற ஒரு முயற்சி பீகாரிலும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். அவர், “மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. பின்னர் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் தேர்தல்கள் நடந்தன. மக்களவைத் தேர்தல்களில், மகாராஷ்டிராவில் i-n-d-i-a கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றது. சட்டமன்றத் தேர்தலில் சில மாதங்களுக்குப் பிறகு, i-n-d-i-a கூட்டணி மோசமாகத் தோற்றது. அப்போது நாங்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால், தரவுகளைப் பார்க்கத் தொடங்கினோம். இதற்கிடையில் 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதை நாங்கள் அறிந்தோம். வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. நாங்கள் கேட்டபோது, அவர்கள் அமைதியாகிவிட்டனர். இதுவரை எங்களுக்கு தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலைக் கிடைக்கவில்லை. மகாராஷ்டிரா தேர்தல்களில் மோசடி நடந்ததாக பீகார் மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். அவர்களும் அதையே செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் இது பீகார் என்று அவர்களுக்குத் தெரியாது, மக்கள் அதை நடக்க விடமாட்டார்கள்” என்றார்.
ஆனால், இதை பாஜக மறுத்துள்ளது. மாநிலத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில் எதுவும் குற்றம் சொல்ல முடியாததால், தேர்தல் ஆணையத்தை i-n-d-i-a கூட்டணி குறை கூறி வருகிறது. இந்திய குடிமக்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டு. நம் நாட்டில், இந்திய குடிமக்கள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை உருவாக்க வாக்களிக்கின்றனர். மேலும், அவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்தே வாக்குகளைப் பதிவு செய்கிறார்கள். எனவே வாக்காளர் பட்டியல்களில் திருத்தம் செய்யப்பட்டால் அவர்களுக்கு என்ன பிரச்னை” என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
தற்போதுள்ள 7,89,69,844 வாக்காளர்களில், ஜனவரி 1, 2023 அன்று கடைசியாக தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பெயர்கள் சேர்க்கப்பட்ட 4.96 கோடி வாக்காளர்கள், தங்கள் விவரங்களைச் சரிபார்த்து, கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்பி, அதைச் சமர்ப்பிக்க வேண்டும். இது, சரிபார்க்கப்பட்டு செப்டம்பர் 30 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தீவிர திருத்தம் (SIR)..
ஒருவேளை, வாக்காளர் பட்டியலில் இருந்து குடிமக்கள் அல்லாதவர்கள் நீக்கப்பட்டால், முதலில் அவர்கள் எப்படி வாக்காளர்களாக மாறினர் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட படிவம் 6இல், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட வேண்டும். சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து குடிமக்கள் அல்லாதவர்களை நீக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கும் அதே வேளையில், படிவம் 6இல் உள்ள இடைவெளி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. படிவம் 6 விண்ணப்பதாரர்கள் தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களையும் வழங்க வேண்டியதில்லை. வெறும் அறிவிப்பு மற்றும் பிறந்த தேதி மற்றும் முகவரிக்கான சான்று போதுமானது என்கிறது, அது. படிவம் 6இன் விதிகள் 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அப்படியெனில், படிவம் 6ஐயும் திருத்த வேண்டும் எனக் கேள்வி எழுந்தது. ஆதார் அல்லது பிற ஆவணங்கள் அடையாளச் சான்றாக இருந்தாலும் குடியுரிமையை நிரூபிக்காது. இருப்பினும், படிவம் 6 இல் பயன்படுத்தக்கூடிய ஒரு ஆவணம் ஆதார் ஆகும். இதையடுத்தே வாக்காளர் மோசடியைத் தடுக்க அரசாங்கம் ஆதாரைப் பயன்படுத்த முயன்றிருக்கலாம் என்றாலும், படிவம் 6 மூலம் வாக்காளராகப் பதிவு செய்ய ஆதாரைப் பயன்படுத்துவது குடிமக்கள் அல்லாதவர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க அனுமதித்திருக்கலாம். ஆதலால், ஆதார் அட்டை தேதி அல்லது பிறந்த இடத்திற்கும், குடியுரிமைக்கும் சான்றாகாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குடிமக்கள் அல்லாதவர்கள்கூட தேர்தல் செயல்பாட்டில் ஈடுபட ஆதாரைப் பயன்படுத்துகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஆதார் போன்ற அன்றாட ஆவணங்களை SIR-ல் இருந்து விலக்குவது குறித்து அரசியல் கட்சிகள் கேள்விக்கு இந்தியா டுடேவுக்குப் பதிலளித்துள்ள UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார், ”ஆதார் ஒருபோதும் முதல் அடையாளம் அல்ல. போலி ஆதார் அட்டைகளைத் தடுக்க UIDAI முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது?
சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தேர்தல் ஆணையம் பீகாரில் வீடு வீடாகச் சென்று ஆய்வை நடத்தி வருகிறது. இந்தியாவில் கடைசியாக இதுபோன்ற தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2003-2004ஆம் ஆண்டில் நடந்தது. அதன் பின்னர், சுருக்கத் திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. மேலும் மில்லியன் கணக்கான சந்தேகத்திற்கிடமான வாக்காளர்கள் வாக்களித்திருக்கலாம். சுருக்கத் திருத்தம் என்பது வாக்காளர் பட்டியல்களின் வழக்கமான புதுப்பிப்பாகும், அதே நேரத்தில் SIR என்பது பட்டியல்களைச் சரிபார்த்து நீக்குவதற்கான வழியாகும். இதற்குக் காரணம், இந்தியாவில் 2 கோடி வங்கதேச சட்டவிரோத குடியேறிகள் இருப்பதாக அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அதன் காரணமாகவே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக நாட்டிற்குள் சட்டவிரோத குடியேறிகள் அதிகரித்து வருவதால், படிவம் 6 மட்டுமல்ல, முழு தேர்தல் செயல்முறையும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையாக உள்ளது.
நாட்டின் குடிமக்கள் ஒருபோதும் பாதிக்கப்படக் கூடாது!
நல்ல பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது நாட்டில் உள்ள வாக்காளர்கள்தான். அவர்கள், உண்மையான குடிமக்களாக இருப்பின் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அதற்காக, வாக்காளர் பட்டியலில் ரகசியமாக நுழைந்திருக்கக்கூடிய சட்டவிரோத குடியேறிகளை அகற்ற, அப்பட்டியலை அவ்வப்போது தீவிரமாக திருத்த வேண்டியது அவசியம். மேலும், அவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், அதற்குமுன்பு குடிமக்கள் அல்லாதவர்கள் முதலில் வாக்காளர்களாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு, ஒரு வாக்காளராகப் பதிவு செய்யும் செயல்முறையை இந்தியா இப்போதே வலுப்படுத்த வேண்டியது அவசியம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் உண்மையான குடிமக்கள் ஒருவர் கூட இதில் பாதிக்கப்பட கூடாது. அதனை உறுதி செய்வதே முதற்கடமை.. தகுதியற்றவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றுவிடக் கூடாது என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உரிய மண்ணின் மைந்தர்கள் வாக்களிக்காமல் போய்விடக் கூடாது. ஏதோ ஒரு கட்சியின் அரசியலுக்கு இந்த நடவடிக்கை சாதகமாக போய் முடிந்துவிடக் கூடாது.